திமுக இளைஞரணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின்! ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை:

திமுக இளைஞரணி மாநில செயலாளராக முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி நியமிக்கப்பட்டு உள்ளதாக, திமுக கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

திமுக தலைவரின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு திமுக தலைமை கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ளது.

திமுக தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவருக்கு கட்சி பதவி வழங்க கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, உதயநிதி ஸ்டாலினுக்கு வழிவிடும் நோக்கில்  திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்த  வெள்ளக்கோவில் சாமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை திமுக இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும். திமுக சட்டவிதி 18, 19 பிரிவுகளின்படி இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்கள் உதயநிதியுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.