ரஜினி – உதயநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன்.. மு.க. ஸ்டாலின் மகன்.. என்றாலும் அரசியல் சர்ச்சைகளில் சிக்கியதில்லை உதயநிதி ஸ்டாலின்.  அவரது படங்களுக்கு ஆளும் தரப்பால் சிக்கல் ஏற்படும்போது அதற்கேற்ப எதிர்வினையாற்றுவார். அவ்வளவுதான்.

மற்றபடி வீணாக அரசியல் பேசுவதில்லை.

தவிர சமீப காலமாக நடிப்பில் தேறிவருகிறார். அடுத்து விருது இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கத்தில் நடிக்க இருப்பது உதயநிதி திரை வாழ்க்கையில் மைல்கல்லாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வீணாக ரஜினி குறித்து பேசி சிக்கலில் மாட்டிக்கொண்டாரே என்று வருத்தப்படுகிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.

அப்படி என்ன சொல்லிவிட்டார் உதயநிதி?

பேட்டி ஒன்றில்,  “ரஜினி அரசியலுக்கு வந்திருப்பது குறித்து…?”  என்று கேட்கப்பட…

அதற்கு உதயநிதி கிண்டலாக.. “ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டாரா? அவர் தன் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகள் எதையும் அறிவிக்கவே இல்லையே… ! கட்சிப் பெயரை  அறிவித்து தேர்தலில் போட்டியிடட்டும், அப்புறம் கருத்து சொல்கிறேன்” என்று பதில் அளித்தார்.

மேலும் “ரஜினிர் ஆன்மிக அரசியல் என்கிறார். அப்படியென்றால் என்னவென்று எனக்கு தெரியாது. நான் ஒரு பகுத்தறிவுவாதி” என்றும் பதில் அளித்திருக்கிறார்.

உதயநிதியின் பதில் ரஜினி ரசிகர்களை ஆத்திரப்படுத்தியிருக்கிறது.

 

“பல வருடங்களாக எதிர்பார்த்து காத்திருந்தோம். இப்போதுதான் வெளிப்படையாக அரசியலுக்கு வந்திருக்கிறார் தலைவர் (ரஜினி.) தனிக்கட்சிதான், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன் என்று கூறியிருக்கிறார். மன்றத்தை பலப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார். அந்த பணி நடந்துவருகிறது. இதெல்லாமே அரசியலுக்கு வந்துவிட்டதன் அர்த்தம்தானே! தவிர ரஜினியே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டாரே..!

இந்த நிலையில், ரஜினி அரசியலுக்கு வரட்டும்… அப்புறம் கருத்து சொல்கிறேன் என்று உதயநிதி கிண்டலாக சொல்வது என்ன நியாயம்” என்று கொதிக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

தற்போது சமூகவலைதளங்களில் உதயநிதிக்கு பதில் அளிக்கிறேன் என்று ஆவேசமாக பதிவிட்டுவருகிறார்கள்.

இதனால்தான் உதயநிதி நலம் விரும்பிகள், தேவையில்லாமல் ஏன் இவர் அரசியல் பேசுகிறார் என்று வருத்தப்படுகிறார்கள்.