சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலி என்பது உண்மையே என்று இந்திய மருத்துவ சங்கத்தின் பட்டியலை வெளியிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நாள்தோறும் 5000ஐ கடந்தது பதிவாகி வருகிறது. 6 நாட்களாக மரணம் 100ஐ கடந்து அதிர்ச்சியை அளிக்கிறது.

ஆனால் கொரோனா மரணங்களை தமிழக அரசு தொடர்ந்து மறைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டிவருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 43 மருத்துவர்கள் இறந்ததாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது. ஆனால் தமிழக அரசு ஏற்க மறுத்தது.

இந் நிலையில் இன்று இந்திய மருத்துவ கூட்டமைப்பே தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக பட்டியலை  வெளியிட்டுள்ளது. இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:

மருத்துவர்களின் மரணத்தையும் மறைப்பதோடு, தொற்றால் இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு 50 லட்சம் நிவாரணம் எனச் சொல்லிவிட்டு 25 லட்சமாகக் குறைத்துள்ளனர். இது தான் உயிரைப்பணயம் வைத்து கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு அரசு செலுத்தும் மரியாதையா? என்று கூறி உள்ளார்.

மற்றொரு பதிவில் அவர் கூறி இருப்பதாவது: இடமாறுதலுக்கு இவ்வளவு, பொறுப்புக்கு அவ்வளவு என கமிஷனில் காட்டும் அக்கறையை, உயிர்காப்பவர்களின் நலனிலும் காட்ட வேண்டும். மருத்துவர், செவிலியர், துப்புரவுப் பணியாளர் என பலியானவர்களின் உண்மையான பட்டியலை வெளியிட்டு அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இதுவே கழகத்தின் எண்ணம்! என்று கூறி உள்ளார்.