உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை குற்றவாளி என தீர்ப்பு

திருப்பூர்

டுமலை சங்கர் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தொடர்பான  வழக்கில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 11 பேரும் குற்றவாளி என்று திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த ஆணவக்கொலை வழக்கு கடந்த மாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 22) என்ற இளைஞர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணான கவுசல்யாவை  காதலித்து கலப்பு மணம் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுசல்யாவின் தந்தை, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கூலியாட்களை வைத்து பட்டப்பகலிலேயே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொடூர தாக்குதலில் சங்கர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். கவுசல்யா வெட்டுக்காயங்கள் சிகிச்சை பெற்று நலமடைந்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆணவக்கொலை காரணமாக கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த  வழக்கில் கடந்த நவ.14-ம் தேதி விசாரணை முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், டிச. 12-ம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என நீதிபதி அலமேலு நடராஜன் அறிவித்தார்.

அதன்படி இன்று தீர்ப்பு வெளியானது. அதில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, எம். மணிகண்டன், எம்.மைக்கேல் (எ) மதன், பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ்,  தமிழ்(எ) தமிழ் கலைவாணன்,  கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் மற்றும் மற்றொரு மணிகண்டன்  என 11 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.