சென்னை: உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் 5 பேருக்கு எதிரான தூக்கு தண்டனைக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம்  இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

அதன்படி,  குற்றவாளிகள் 5 பேரின் மரணத் தண்டனை ஆயுள் தண்டனையாகவும், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை  செய்தும் உள்ளது. மேலும், ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட  கவுசல்யாவின்  தாய் அன்னலஷ்மி, மாமா பாண்டிதுரை, வாகனம் ஏற்பாடு செய்த பிரசன்ன குமார் ஆகியோர் மூவரின் விடுதலையையும் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

மேலும், கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல், விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர்நீதிமன்றம், இவர்கள் குறைந்து 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பலித்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர். அவரது மனைவி கவுசல்யா மீது 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் சங்கர் பலியானார். வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

வழக்கிலிருந்து கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் பாண்டித்துரை, கல்லூரி மாணவன் பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில்  தண்டனை பெற்றவர்கள்  உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.