டில்லி:

பேராசிரியர் பணியிடங்களின் இடஒதுக்கீட்டிற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) புதிய சூத்திரத்தை மத்திய மனித வள மேம்பாட்டு துறை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதால் பல்கலை க்கழகங்களில் எஸ்சி, எஸ்டி, ஒபிசி பேராசிரியர்களின் எண்ணிக்கை சுருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களின் மொத்த பணியிடங்களை தவிர்த்து, துறை ரீதியாக இட ஒதுக்கீடு பணியிடங்களை கணக்கீடு செய்ய வேண்டும் என்று யூஜிசி கடந்த மாதம் முடிவு எடுத்தது. இந்த புதிய முடிவால் எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினர் பாதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசின் முன்னாள் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரலில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது. கண் மூடித்தனமாக இட ஒதுக்கீடை அமல்படுத்தும் யூஜிசி.யை நீதிமன்றம் விமர்சனம் செய்திருந்தது.

தற்போதுள்ள நடைமுறையின் படி பார்த்தால் பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட ஒரு துறையில் இடஒதுக்கீடு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பார்கள். மற்றொரு பாடப்பிரிவில் இட ஒதுக்கீடு இல்லாத ஆசிரியர்களே இருப்பார்கள் என்று உயர்நீதிமன்றம் சுட்டிகாட்டியிருந்தது.

இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அமல்படுத்த யூஜிசி நிலைக்குழு முடிவு செய்தது. யூஜிசி.யின் நிதியுதவி பெறும் 41 பல்கலைக்கழகங்களில் உள்ள 17 ஆயிரத்து 106 பேராசிரியர் பணியிடங்களுக்கும் இதை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 5 ஆயிரத்து 997 இடங்கள் கடந்த ஏப்ரல் முதல் காலியாக உள்ளது. சுமார் 35 சதவீத பணியிடம் காலியாக உள்ளது. இதில் உதவி பேராசிரியர் பணியிடம் 2 ஆயிரத்து 457. இணை பேராசிரியர் பணியிடம் 2 ஆயிரத்து 217. பேராசிரியர் பணியிடம் ஆயிரத்து 98 ஆகும்.

இது குறித்து கிருஷ்ணன் கூறுகையில், ‘‘புதிய நடைமுறைக்கான பரிந்துரையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைத்து ஒப்புதலுக்காக யூஜிசி காத்திருக்கிறது. அனைத்து கல்வி நிறுவனங்களும் காலியாக உள்ள பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நிரப்பிக் கொள்ளுமாறு உயர்கல்வி ஒழுங்குமுறை அறிவுறுத்தி வருகிறது. இதனால் இடஒதுக்கீடு அமல்படுத்துவதில் எதுவும் மாற்றம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

புதிய நடைமுறையின் படி கணக்கிட்டால் இடஒதுக்கீட்டிற்கான பணியிடங்கள் அதிகளவில் குறையும் வாய்ப்பு உள்ளது. தற்போது ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனி பிரிவாக கருதப்பட்டு பேராசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு கணக்கிடப்படுகிறது. அனைத்து பணியிடங்களும் ஒன்றாக கருத்தப்பட்டு இட ஒதுக்கீடு கணக்கிடப்படுகிறது.

புதிய நடைமுறையில் பல்லைக்கழகத்தில் உள்ள ஒவ்வொரு துறையும் ஒரு பிரிவாக கணக்கிடப்படும். இதன் மூலம் அந்த துறையில் உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் தனித்தனியாக இடஒதுக்கீட்டிற்கு கணக்கிட்டப்படும்.

சில துறைகளில் ஒரே ஒரு பேராசிரியர் பணியிடம் தான் இருக்கும். அப்போது அங்கே இடஒதுக்கீடு வர வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அதேசமயம் அனைத்து துறை பேராசிரியர் பணியிடங்களும் ஒன்றாக இணைத்து கணக்கீடு செய்தால் இடஒதுக்கீட்டில் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘நமது இலக்கு வலுவான இந்தியாவை அமைக்க வேண்டும் என்றால் பலதரப்பட்ட மக்கள் தொகையில் தகுதி பெற்றவர்களும் முன்னேற்றும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும். வலுவிழந்த இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு என்றால் இடஒதுக்கீட்டை சிதைக்கும் விதிகளை கொண்டு வரலாம்’’ என்றார்.