கொரோனா தீவிரம்: யுஜிசி நெட் 2021 தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு…

டெல்லி: மே மாதம் நடைபெற இருந்த UGC NET 2021 தேர்வு, கொரோனா 2வது அலையின் தீவிர பரவல் காரணமாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும்  ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

UGC NET 2021-க்கான தேர்வு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. இதற்கு நாடு முழுவதும் லட்சகணக்கானோர் பதிவு செய்திரந்தனர். ஆனால், கொரோனா காரணமாக அவை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, டிசம்பர் மாதம் நடக்கவிருந்த UGC NET 2021 தேர்வுகள் மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டன.  அதன்படி மே 2ந்தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த UGC NET 2021 மே மாத தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசியத் தேர்வு முகமையான NTA அறிவித்துள்ளது.

“கோவிட் 19 (COVID-19) தொற்றுநோய் மீண்டும் தீவிரம் அடைந்துவரும் நிலையில், தேர்வு எழுதுவோரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மனதில் கொண்டு, கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அவர்கள் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு NTA-வை கேட்டுக்கொண்டுள்ளார்” என்று டிவீட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு குறித்து, 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.

ஏற்கனவே  12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், JEE Main தேர்வுகள் ஆகியவை ஒத்திவைகக்ப்பட்டதைத் தொடர்ந்து தற்போது UGC NET 2021 தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.