பால் தினகரனின் (காருண்யா) ‘தொழில்நுட்ப நிறுவனத்தை’ மூட யு.ஜி.சி. உத்தரவு!

கோவை,

பிரபல கிறிஸ்தவ மத போதகரான பால் தினகரனின் காரூண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனத்தை மூட யுஜிசி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தொழில்நுட்பம்  மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

‘ஜீசஸ் கால்ஸ்’ என்ற கிறிஸ்தவ மதபோதக நிறுவனத்தை உலகம் முழுவதும் மத போதனை நடத்தி வருபவர் டிஜிஎஸ் தினகரனின் மகன் பால் தினகரன். இவர்களது கல்வி நிறுவனம் கோவையில் உள்ள காரூண்யா நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த  காரூண்யா நிகர்நிலை பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது.

இங்கு, யுஜிசி சார்பாக தொழில்நுட்ப குழுவினர் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கட்டமைப்பு சரியில்லை என்று கூறி, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளனர்.

பல்கலை மானியக்குழு, அனைத்து நிகர்நிலை பல்கலைகளிலும், ஆய்வு செய்யப்பட்டு, தொடர் அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கோவை காரூண்யா பல்கலைகக்ழகத்தில் ஆய்வு செய்தபோது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும்,   யு.ஜி.சி., விதிப்படி தங்களது நிறுவனத்தின் பாடப்பிரிவுகள் செயல்படவில்லை என்றும், அதைத்தொடர்ந்து  தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தை மூட வேண்டும் என்றும்,  அந்நிறுவனத்தால் வழங்கப்பட்ட, பட்ட சான்றிதழ்கள் செல்லாது எனவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் சார்பு செயலர் குண்ட்லா மஹாஜன், காருண்யா பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், பல்கலைக்கழக மானியக்குழுவான., தாண்டன் குழுவினர் பரிந்துரையின்படி, குறைகள் களையப்பட்டு, தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.

தீர்வு காணாத, ‘பி’ பிரிவு நிகர்நிலை பல்கலைகளில், புதிய கல்வி மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட விரிவாக்க பணிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என, அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில், கோவையில், ‘பி’ பிரிவில் உள்ள காருண்யா நிகர்நிலை பல்கலையின் கீழ் செயல்படும், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில், புதிய கல்வி மையங்கள், புதிய துறைகள் மற்றும் புதிய பாடத் திட்டங்கள் துவங்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க முடியாது.

யு.ஜி.சி., குழு ஆய்வு செய்து, அக்குழுவினர் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் தான், எதற்கும் அனுமதி அளிக்க முடியும்.

இந்த விதி அடிப்படையில் தான், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், 2004, ஜூன், 23 முதல், 2007 ஜூன், 22 வரை நிகர்நிலை பல்கலை அந்தஸ்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்பின், நிகர்நிலை அந்தஸ்தில், இந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை. அதன் அடிப்படையில், யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் மற்றும் அதில் துவங்கப்பட்ட பாடப் பிரிவுகளை மூட அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட, பட்ட சான்றிதழ்களும், பாடப் பிரிவுகளும் செல்லாததாக எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த கடிதம் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள், உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காரூண்யா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வரும் ஒருசில பாடப்பிரிவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் சான்றிதழ் செல்லாது என அறிவித்திருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: UGC Order to close the Technology Institute in Paul Dinakaran's Karunya University, பால் தினகரனின் (காருண்யா) 'தொழில்நுட்ப நிறுவனத்தை' மூட யு.ஜி.சி. உத்தரவு!
-=-