Random image

விஜய்மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு: டிசம்பர் 10ந்தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக லண்டன் நீதிமன்றம் அறிவிப்பு

லண்டன்:

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடை பெற்ற இறுதிக்கட்ட விசாரணையை  தொடர்ந்து, இந்த வழக்கில் டிசம்பர் 10ம்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதி மன்றம் அறிவித்துள்ளது.

லண்டன் கோர்ட்டு வளாகத்தில் விஜய் மல்லையா

பிரபல இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பிடம் சுமார் 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து தப்பிச் சென்றார். அங்கு குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். அவரை  இந்தியாவுக்கு அழைத்து மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரி இங்கிலாந்து அரசிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. இது தொடர்பான வழக்கு லண்டனிலுள்ள  வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே மும்பை சிறை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வீடியோ குறித்து நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து விஜய்மல்லையா நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் டிசம்பர் 10ந்தேதி அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

தீர்ப்பில் விஜய்மல்லையா நாடு கடத்தப்படுவாரா என்பது தெரிய வரும்.