இந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெளி நாடுகள்

டில்லி

டகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.  இந்த திருத்தத்தின்படி கடந்த 2014 ஆம் வருடம் டிசம்பர் 31க்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள இஸ்லாமியர் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது

இதற்கு நாடெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.    இங்குள்ள பழங்குடி மக்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்குக் குடியுரிமை அளிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் நடந்த போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இருவர் மரணம் அடைந்துள்ளனர்.   இதனால்  போராட்டம் மேலும் அதிகரித்துள்ளது.  இதையொட்டி அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கான ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.    கவுகாத்தி நகரில் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் அரசுகள் இந்தியாவுக்கு வரும்  பயணிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என தங்கள் இணைய தளங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளன.   குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.