இங்கிலாந்து:  இஸ்லாமிய மதபோதகர் அன்ஜெம் சௌத்ரி கடும் நிபந்தனைகளுடன் விடுதலை

பிரிட்டிஷ் இஸ்லாமிய போதகர் அன்ஜெம் சௌத்ரி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவிற்கு ஆதரவு திரட்டியதற்காக 2016 ல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு பெல்ம்ஷார் சிறையில் இருந்து கடுமையான கட்டுப்பாடுகளின்கீழ் விடுவிக்கப்பட்டார்.

காவல்துறை மற்றும் இங்கிலாந்து உளவு நிறுவனமான MI5 ஆகியவை இவரை தீவிர கண்காணிப்பின்கீழ் வைத்திருக்குமென அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அவர் குறிப்பிட்ட சில மசூதிகளுக்கு மட்டுமே செல்ல முடியும். மேலும் முன்கூட்டியே ஒப்புதல் பெறாமல் தீவிரவாதத் தொடர்புடைய குற்றங்களுக்கு, குற்றம் சாட்டப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்ட நபர்களைத் தொடர்புகொள்வதும்  தடை செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளமான ட்விட்டரை அன்ஜெம் சௌத்ரி பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது. அவருடைய பெயர் ஐ.நா.வின் பொருளாதாரத் தடங்கல்களில் சேர்க்கப்பட்டுள்ளது, அதாவது அவர் சொத்துக்கள் முடக்கம் மற்றும் பயண தடைக்கு உட்பட்டவர் என்பதாகும்.