கியுவ்

க்ரைன் நாட்டின் புதிய அதிபரான வொளோடிமிர் செலரிஸ்கி தனது புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் மாட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

 

 

உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வொளோடிமிர் செலரிஸ்கி இதற்கு முன்பு நகைச்சுவை நடிகராக இருந்தவர் ஆவார். அவர் ஒரு முறை தாமும் ஜனாதிபதி ஆக வேண்டும் என தமக்கு ஒரு நகைச்சுவையான எண்ணம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தாம் ஜனாதிபதி ஆனால் தலைவர்களை விட பொது மக்களுக்கே சேவை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிபிட்டார்.

பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கிய செலரிஸ்கி அதன் பிறகு நடிப்புத் துறையில் நுழைந்து பிரபல நகைச்சுவை நடிகர் ஆனார். அதன் பிறகு அரசியல் அனுபவம் ஏதுமின்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். ஜனாதிபதி தேர்தலில் முந்தைய ஜனாதிபதி பெட்ரொ போரோஷென்கோவை  200% வாக்கு வித்தியசத்தில் தோற்கடித்தார்.

பதவி ஏற்றதும் செலரிஸ்கி தனது தொடக்க உரையில், “நான் முன்பு நகைச்சுவையாக கூறியது போல் தற்போது உண்மையில் ஜனாதிபதி ஆகி உள்ளேன். அப்போது கூறியது போலவே நான் இப்போதும் பொதுமக்களில் ஒருவனாக சேவை செய்யவே விரும்புகிறேன். எனவே எனது புகைப்படத்தை எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் மாட்ட வேண்டாம்.

ஜனாதிபதி என்பவர் நாட்டை வழி நடத்தி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டியவர். அவருடைய படத்தை வைப்பது தவறாகும். அவர் ஒரு சித்திரமோ அல்லது சிலையோ இல்லை. எனது படத்துக்கு பதில் உங்கள் குழந்தைகளின் படத்தை மாட்டுங்கள். எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்பும் அந்த புகைப்படத்தை பார்த்து விட்டு முடிவு எடுங்கள்” என தெரிவித்துள்ளார்.