“ஓரின திருமணத்திற்கான தண்டனையே கொரோனா” – இதைக்கூறிய மதகுருவுக்கே இப்போது கொரோனா..!

--

கிவ்: கொரோனா வைரஸ் என்பது, ஒரே பாலின திருமணத்தின் காரணமாக, மனிதகுலத்திற்கு கடவுள் அளித்த தண்டனை என்று பேசியிருந்த உக்ரைன் நாட்டின் புகழ்பெற்ற மதகுருவிற்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் ஆர்தடாக்ஸ் தேவாலயத்தின் தலைமை குருவாக இருப்பவர் ஃபிலாரெட். இவர்தான், மேற்கண்ட கருத்தைக் கூறியிருந்தார். இந்நிலையில், இவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிய தகவல், இம்மாதம் 4ம் தேதி வெளியானது. ஃபிலாரெட்டின் நலனிற்காக, அவரின்மேல் அன்புவைத்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று அறிவித்துள்ளது சம்பந்தப்பட்ட தேவாலயம்.

மேலும், பிரார்த்தனையை தொடருமாறும், அதன்மூலம் அவரை எல்லாம் வல்ல இறைவன் விரைவில் குணப்படுத்துவார் என்றும் தேவாலயம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது 91 வயதாகும் மதகுருவான ஃபிலாரெட், கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் குறித்த தனது கருத்தை தெரிவித்தபோது, பெரிய பரபரப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.