அயோத்தி பிரச்சினைக்காக, அது சார்ந்த பணிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அத்வானிக்கு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சமர்ப்பணம் செய்வதாக பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வந்தன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்து, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவே எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையாடு செய்யப்பட்டது. சுமார் 40 நாட்கள் தொடர் விசாரணைக்கு பின்னர், இவ்வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், நிலத்தில் ராமர் கோவில் கட்ட தடையில்லை என்றும், மசூதி கட்ட வேறு இடத்தை ஒதுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அயோத்தி பிரச்சினைக்காக, அது சார்ந்த பணிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்தவர்களுக்கு எனது சமர்ப்பணம். இந்த மிகச்சிறந்த பணியில் எங்களை ஈடுபடுத்தி உழைப்பை தரக் காரணமாக இருந்த அத்வானிக்கு சமர்ப்பணம்” என்று தெரிவித்துள்ளார்.