டெல்லி: கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், மாநிலஅரசு மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது  என பாஜக தலைவர்கள், மாநில பாஜக அரசுக்கும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது மாணவி பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை அரசியல் கட்சித் தலைவர்களும் ஊடகத்தினரும் சந்திக்க 2 நாள்களாக அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி ஹத்ராஸ் செல்ல முயன்ற காங்கிரஸின் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

போலீஸார் அத்துமீறி அவர்களைத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சில பாஜக தலைவர்களும் மாநில அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக பாஜக பெண் எம்.பி.க்கள் யோகி அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

ஹத்ராஸ் சம்பவத்தில் உ.பி போலீஸாரின் செயல்பாட்டால் அரசுக்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவர் உமா பாரதி கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் யோகிக்கு டிவிட்டர் மூலம் அறிவுரை கூறியுள்ளார்.

அதில்,  ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க அரசியல் கட்சியினருக்கும் ஊடகத்தினருக்கும் உ.பி அரசு அனுமதியளிக்க வேண்டும்,  `ஹத்ராஸில் நடைபெற்ற சம்பவங்களும் உ.பி போலீஸாரின் மர்மமான நடவடிக்கைகளும் தங்களது ஆட்சிக்கும் பாரதிய ஐனதா கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஊடகத்தினரும் சந்திக்க அனுமதி கொடுங்கள்.  நான் தங்களை விட வயதில் மூத்தவர். எனவே, தங்களது மூத்த சகோதரியாகக் கருதி இக்கோரிக்கையினை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று உமாபாரதி டிவிட்டரில் வலியுறுத்தியிருக்கிறார்.

பாஜக எம்.பி.யான மற்றொரு பெண் தலைவரான  கிரிட் சோலங்கி, ஹத்ராஸ் தலித் பெண் இறந்ததில், நள்ளிரவே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது சரியல்ல என்றும், மாநில அரசு மற்றும் காவல்துறையினரின்  நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ளது.  உ.பி. காவல்துறை “அதிக உணர்திறன் மற்றும் பொறுப்புடன்” இருக்க வேண்டும் என்றும், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த மற்றொரு சாமியாரினியான சாத்வி நிரஞ்சன் ஜோதி, ஹத்ராஜ் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை, இறுதிச்சடங்கு செய்ய அவரது  குடும்பத்திற்கு வழங்கியிருக்க வேண்டும், இதில் காவல்துறையினரின் நடவடிக்கை கேள்விக்குரியாகி உள்ளது என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

யோகியின் அரசுமீது பாஜகவைச் சேர்ந்த பெண் தலைவர்களே கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஊடகத்தினர் சந்திக்க இரண்டு நாள்களுக்குப் பின்னர் மாவட்ட நிர்வாகம் இன்று அனுமதியளித்தது. அதேநேரம், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.