டில்லி

ரியானா மாநிலத்தில் அரசு அமைக்க லோகித் கட்சி உறுப்பினர் கோபால் கந்தாவின் ஆதரவை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.

அரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.  எனவே சுயேச்சை மற்றும் சிறு கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகிறது.  அவ்வகையில் அரியானா லோகித் கட்சியின் ஒரே உறுப்பினரான கோபால் கந்தா தனது ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளார்.

கோபால் கந்தா மீது ஓட்டலில் பணிபுரிந்து மரணம் அடைந்த கீதிகா சர்மா மற்றும் அவரது தாயாரை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டியதாக  ஒரு புகார் எழுந்தது.   அப்போது பாஜகவினர் அவரை கைது செய்ய போராட்டங்கள் நடத்தினார்கள்.   நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள இந்த வழக்கில் கோபால் கந்தா ஜாமீனில் வந்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி தற்போது கோபால் கந்தாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  உமா பாரதி, “பாஜகவுக்கு கோபால் கந்தா என்னும் சட்டபேரவை உறுப்பினர் ஆதரவு அளிக்க உள்ளதாக வந்த தகவலை நானும் அறிவேன்.  இது குறித்து எனக்கு பல ஆட்சேபங்கள் உள்ளன.  அவர் ஒரு பெண் மற்றும் அவர் தாயார் மரணத்துக்கு காரணமானவர் ஆவார்.

அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.  கொலை வழக்கில் தொடர்புடைய கோபால் கந்தாவின் ஆதரவை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன்.  நம்மிடம் மோடி போன்ற மனிதர் இருக்கும்போது கோபால் கந்தா போன்ற குற்றம் சாட்டப்பட்டவர் ஆதரவு தேவை இல்லை.  நமது கட்சியின் நேர்மையான போக்குக்கு இவரது ஆதரவு தேவை இல்லை என்பதை நாம் உணர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.