சென்னை: உரிய நேரத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தப்படும் என, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையச் செயலாளர்  உமேஷ் சின்ஹா கூறினார்.

தமிழக சட்டமன்ற ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய 2 நாள் பயணமாக  இந்திய தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு நேற்று சென்னை வந்தது.  தேர்தல் ஆணைய குழுவின அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசிய வாத காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

அதிமுக சார்பில், ஏப்ரல் 3வது அல்லது 4வது வாரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் 11 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பெரும்பாலான கட்சிகள்  சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை களைந்து, சரியான பட்டியலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியதுடன், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதி அளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தன.

இந்த நிலையில், இன்று செய்தியளார்களை சந்தித்த  உமேஷ் சின்ஹா கூறியதாவது,  “தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுதிறனாளிகள் தபால் வாக்கை பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.

தேர்தலின்போது  முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கழிவறை வசதிகள், சாய்வு தளம் ஏற்படுத்தி தரப்படும்.

1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

தொடர்ந்து, “மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பதை இப்போதே சொல்ல முடியாது.

பணப்பட்டுவாடா, பரிசுப்பொருள் விநியோகம் போன்றவற்றை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன.

அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று மரபுப்படி தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்.

காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.