சென்னை:

இந்திய பெண் தொழில் முனைவோருக்கு சர்வேச வர்த்தக வாய்ப்புகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்கிறது. இந்த திட்டத்திற்கு பெயர் ‘ஷி டிரேட்ஸ்’ (அவள் வர்த்தகம்) என்று ஐநா பெயரிட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பெண் தொழில் முனைவோரை கடந்த 2 ஆண்டுகளில் இணைத்துள்ளது.

2020ம்  ஆண்டுக்குள்  சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இந்த வாய்ப்பை 30 லட்சம் பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க ஐநா திட்டமிட்டுள்ளது. இதில் இந்திய பெண்கள் 3 லட்சம் பேர் இடம்பெறுவர்.

இது குறித்து ஐநா அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ இந்திய பெண்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய பெண் தொழில் முனைவோர் குழுவினர் வரும் ஜூன் மாதம் பிரிட்டன் லிவர்பூலில் நடக்கும் சர்வதேச வர்த்தக கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்’’ என்றார்.

ஐநா உதவி செயலாளர் அரன்சா கோசலேஸ் கூறுகையில், ‘‘100 கோடி பெண்கள் சந்தை தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உள்நாட்டு வளர்ச்சிக்கு உதவ முடியும். 100 கோடி பெண்கள் பணியாற்ற தொடங்கினால் அமெரிக்கா மற்றும் சீனா என இரண்டு நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார அளவுக்கு சமமாகும். இதன் மூலம் வறுமையை விரட்டமுடியும்’’ என்றார்.

இ&வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், சேவை துகைளுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். ஏற்றுமதிக்கு அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. கிழக்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் நடுத்தர மக்களுக்கு இந்த முதலீடு மற்றும் சர்வதேச வர்த்தக வாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.