இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் பதற்றத்தை குறைக்க வேண்டும்: ஐ.நா.சபை வேண்டுகோள்

ஐ:நா:

அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடித்து, பதற்றம் குறைய நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் ஆண்டோனியோ கட்டெர்ரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் தற்கொலைப் படை தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானுக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு தருவதாகவும் குற்றஞ்சாட்டியது.

இதனையடுத்து, இரு நாடுகளிடையேயும் பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜ்ஜாரிக் அளித்த பேட்டியில்,புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும், பதற்றம் குறைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை பொதுச் செயலர் அண்டோனியோ கட்டெர்ரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க ஐநா சபை தயாராகவே உள்ளது. ஏற்கெனவே, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு மிகவும் மோசமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளிடையேயான உறவு இன்னும் மோசமடைந்துள்ளது.

இரு தரப்பிலும் பதற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐநா. சபையை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். ஐநாவுக்கான பாகிஸ்தானின் பிரதியை ஐநா.சபை பொதுச் செயலர் அண்டோனியோ கட்டெர்ரெஸ் ஆலோசனைக்காக அழைத்துள்ளார்.

இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டை காத்து, பதற்றத்தை உடனே குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

You may have missed