வாஷிங்டன்

டில்லி மாணவி சஃபூரா சர்கார் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்ததற்கு இந்திய அரசுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டில்லியில் மாபெரும் போராட்டம் நடந்தது.    இதில் ஜஃபராபாத் பகுதியில் நடந்த சாலை மறியல் போராட்ட வழக்கில் இதில் கலந்து கொண்டதற்காக டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவியான சஃபூரா சர்கார் என்னும் 27 வயது பெண் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டர்.  அதன் பிறகு அவருக்கு ஏப்ரல் 13 அன்று ஜாமீன் கிடைத்தது.

ஆனால் பிப்ரவரி மாதம் நடந்த மற்றொரு மறியல் வழக்கில் அவர் பெயர் சேர்க்கப்பட்டு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.  வட கிழக்கு டில்லி கலவரங்களைத் திட்டமிட்டதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளதாக குறம் சாட்டிய டில்லி காவல்துறையினரால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர் அப்போது கர்ப்பமாக இருந்ததால் மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் ஜூன் மாதம் ஜாமீன் பெற்றார்.

ஐநா சபையின் சட்டவிரோத கைதுக்கு எதிரான செயற்குழு ஐநா சபையின் மனித உரிமைக் குழுவின் ஒரு அங்கமாகும்.   இந்த குழுவில் ஆஸ்திரேலியா, லதிவியா, தென் கொரியா, ஜாம்பியா மற்றும் ஈக்குவடார் நாட்டுப் பிரதிநிதிகள் உள்ளனர்.  இந்த செயற்குழு சஃபூரா சர்கார் இந்திய அரசால் கைது செய்யப்பட்டது குறித்து இந்திய அரசின் விளக்கத்தைக் கோரியது.

அந்த விளக்கத்தின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் சஃபூரா சர்கார் கைது சர்வதேச மனித உரிமை விதிகளில் 2,3,7,8,9,10,11,19 20, மற்றும் 21 விதிகளுக்கு எதிரானதாக உள்ளது.   மற்றும் இது மனித உரிமைச் சட்டங்களை மீறிய செயலாகும்” என கருத்து தெரிவித்தது.  ஏற்கனவே பிரிட்டன் தொழிலதிபர் கிறிஸ்டியன் மைக்கேல் கைதுக்கும் இதே குழு இந்திய அரசு மீது குற்றம் சாட்டி இருந்தது.

மேலும் இந்தக் குழு தற்போது அளித்துள்ள அறிக்கையின் படி எந்த ஒரு மனிதரின் சுதந்திர நடவடிக்கைகளையும் அரசு முடக்கக் கூடாது எனவும் இதனால் சஃபூரா சர்க்கார் கைது மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது அவரது மனித உரிமையை மீறிய செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் காவல்துறையினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினரே அவரை கைது செய்துள்ளதையும் குழு சுட்டிக் காட்டி உள்ளது.

அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட பிறகும் மற்றொரு காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் கைது செய்தது அவர் மீது தவறான சட்டம் பாய்ந்துள்ளதைத் தெளிவாக்குவதாகவும் குழு தெரிவித்துள்ளது.  மேலும் அப்போது உடனடி கைது மற்றும் சிறை அடைப்புக்கு எவ்வித தேவையும் இல்லாமல் கைது செய்யப்பட்டதாகவும் இந்திய அரசு மீது குழு குற்றம் சாட்டி உள்ளது.

மேலும்  குழு, “சஃபூரா சர்க்கார் கைது சர்வதேச அளவில் ஒப்புக் கொண்ட மனித உரிமை விதிகளுக்குப் புறம்பானதாகும், கருத்துரிமை மற்றும், பேச்சுரிமைக்கு இந்த கைது  எதிரானதாக உள்ளது.  அவர் இந்திய நாட்டு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தனது கருத்தைத் தெரிவிக்கவோ அதை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தவோ அவருக்கு முழு உரிமை உண்டு.

அவரது உரிமையை முடக்க இந்த கைது நடவடிக்கைகள் நடந்துள்ளதாக முடிவுக்கு வர வேண்டி உள்ளது.  அவர் இந்த சட்ட எதிர்ப்புக் குழுவில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலகழக  பிரிவில் தலைமை பொறுப்பு ஏற்றவர்களில் ஒருவராக இருந்துள்ளார் ஏன்னும் ஒரே காரணத்துக்காக  இந்த கைது நடந்துள்ளது.  அவர் முழுக்க முழுக்க அந்த குழுவின் ஆணைப்படி செயல்பட்டுள்ளார்.  எனவே இதில் அவரை எவ்விதத்திலும் குற்றம் சாட்ட முடியாது. ” எனக் கருத்து தெரிவித்துள்ளது.