UN Geneva staff fight pay cut plans

ஆண்டுக்கான ஊதியத்தில் 7.5% குறைக்கப்பட்டதைக் கண்டித்து ஐநா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெனீவாவில் உள்ள ஐநா தலைமை அலுவலகத்தில் கூடிய 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், சம்பளக்குறைப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவிட்சர்லாந்த் நாட்டின் ஜெனீவாவில் ஐநா தலைமை அலுலவகம் உட்பட அதன் பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. அவற்றில் பணியாற்றும் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு, ஆண்டு ஊதியத்தில் 7.5 விழுக்காடை குறைக்க அண்மையில் முடிவெடுக்கப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள ஐநா அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அங்கங்கு உள்ள வாழ்க்கைச் செலவு நிலவரத்திற்கு தகுந்தாற் போல் சம்பள விகிதத்தை திருத்தி அமைக்க ஐநாவுக்கான சர்வதே சிவில் சர்வீஸ் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன்படி ஜெனீவா அலுலவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சம்பள விகிதத்தை குறைக்க முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், ஜெனீவாவில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் ஐநா ஊழியர்களுக்கு, அங்கு நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலை காரணமாக அண்மையில் சம்பள விகிதம் குறைக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தங்களுக்கும் சம்பளக் குறைப்பை அமல் படுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஜெனீவாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐநா ஊழியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நேரடியாக பாதிக்கும் இந்த சம்பளக்குறைப்பு நடவடிக்கை, பணிச்சூழலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சம்பள விகிதத்தை குறைக்கும் இந்த முடிவு தமக்கு ஏற்புடையதல்ல என்று ஐநா பொதுச்சயெலாளர் ஆன்டோனியோ கட்டர்ஸ் தெரிவித்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியுள்ளனர்.

ஐநா ஊழியர்களுக்கே இந்த நிலைமையா?