மனித உரிமைகளை மதியுங்கள் – இந்திய அரசுக்கு ஐ.நா. கோரிக்கை

ஜெனிவா: காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

மனித உரிமைகளுக்கான ஐ.நா.அவையின் ஹை கமிஷனர் மிட்செல் பேச்லெட் கூறியதாவது, “அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேட்டில் பல லட்சக்கணக்கான மக்களின் பெயர் விடுபட்டுள்ளது. காஷ்மீரில் தகவல் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு மக்கள் பரிதவிப்பான நிலையில் உள்ளனர்.

எனவே, மேற்கண்ட இரண்டு இடங்களிலும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதை இந்திய அரசு உறுதிசெய்ய வேண்டும். காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய இடங்களில் தற்போது நிலவிவரும் சூழல் என்னை மிகவும் கவலைக்கொள்ள செய்கிறது.

காஷ்மீரில் தகவல்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, மக்கள் அமைதியாக கூடுவது தடைசெய்யப்பட்டு, உள்ளூர் அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒன்றல்ல. மக்களுக்கு அடிப்படையான வசதிகள் வழங்கப்பட வேண்டும். காஷ்மீர் தொடர்பான முடிவுகளில் அம்மாநில மக்களும் பங்கு கொள்வதற்கு வழிசெய்ய வேண்டும்.

அஸ்ஸாமில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் மூலம் யாரும் நாடற்ற அகதிகளாகி விடாதவாறு இந்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்” என்பதான கோரிக்கைகள் இந்திய அரசுக்கு வைக்கப்பட்டுள்ளன.