Random image

தீபாவளிக்கு சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா. முடிவு

தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதமாக அடுத்த மாதம் சிறப்பு தபால் தலையை வெளியிட உள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஐ.நா.வின் இந்த அறிவிப்பை இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் சயத் அக்பருதீன் வரவேற்றுள்ளார்.

Diwali

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 6ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை இந்தியாவை மட்டுமின்றி, உலகில் உள்ள இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதமாக, சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா. சபை முடிவெடுத்துள்ளது. இது குறித்து ஐ.நா. சபையின் அறிக்கையில் கூறியதாவது,

“ தீபாவளி பண்டிகைக்காக ஐ.நா.வின் தபால் தலை நிர்வாக பிரிவு சிறப்பு தபால் தலையை வெளியிட உள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் அக்டோபர் மாதம் 19ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்படும். ஒரு தாளில் 10 தபால் தலைகள் இருக்கும். அதன் விலை 1.15 டாலர். சிறப்பு தபால் தலையில் அகல் விளக்கு ஒளிரும் படம் இடம் பெற்றிருக்கும், அதன் பின்னணியில் ஐ.நா. தலைமை அலுவலக கட்டிடமும், ‘ மகிழ்ச்சியான தீபாவளி ‘ வாழ்த்தும் இடம்பெறும் “ என கூறப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் இத்தகைய முடிவிற்கு இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் சயத் அக்பருதீன் வரவேற்பு தெரிவித்துள்ளார். ’ தீபாவளிக்கு ஐ.நா.வின் அருமையான பரிசு இது ‘ என்றும் அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டும் தீபாவளி சிறப்பு தபால் தலை அமெரிக்காவில் வெளியிடப்பட்ட்டது குறிப்பிடத்தக்கது.