ஐ.நா.: பயங்கரவாதம் நிறுத்தப்படாத சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை…..சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்

நியூயார்க்:

பயங்கரவாதம் நிறுத்தப்படாததால் பாகிஸ்தானுடன் பேச்சுவாத்தை நடத்தும் சூழ்நிலை இல்லை என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் பேசினார்.

ஐ.நா. பொதுச் சபையின் 73-வது கூட்டம் நியூயார்க் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டு பேசுகையில்,‘‘ பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு உதவவேண்டும். இந்தியாவில் மோடி கேர் திட்டத்தின் கீழ் 50 கோடி பேர் பயன் அடையவுள்ளனர். ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தின் கீழ் 32 கோடிக்கும் அதிகமானோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். உலகம் ஒரு குடும்பமாக மோடி அரசு கருதுகிறது.

பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் உலகிற்கு பெரும் சவாலாக உள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருந்த பாகிஸ்தான் ஒசாமாவிற்கு அடைக்கலம் கொடுத்தது. மும்பை தாக்குதலுக்கு காரணமாக ஹபீஸ் சையத் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகின்றனர்’’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில்,‘‘மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமாக கொண்டுள்ளது. பதன்கோட் தாக்குதலில் பாகிஸ்தான் எங்களை ஏமாற்றியுள்ளது. பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது. தற்போதைய பிரதமர் இம்ரான்கான் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். ஆனால் பயங்கரவாதம் நிறுத்தப்படவில்லை. அதனால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒன்று சேர வேண்டியது அவசியம்’’ என்றார்.