ஆன்லைன் வகுப்புகளை பார்க்க முடியவில்லையே…! கேரளாவில் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை

மலப்புரம்:  கேரளாவில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரை விட்டுள்ளார்.

அம்மாநிலத்துக்குட்பட்ட மலப்புரம் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கேரளாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்காக இப்போது ஆன் லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளன. தொலைக்காட்சி மூலமாகவும் பாடம் கற்பித்து தரப்படுகிறது.

ஆனால் மாநிலத்தில் 2.50 லட்சம் மாணவர்கள் தொலைக்காட்சி அல்லது இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். அதற்காக மையங்களை ஏற்படுத்தி தருவதற்கு அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந் நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரை விட்டுள்ளார். வளஞ்சேரியில் உள்ள தமது சிறிய வீட்டில் அவர் வசித்து வந்தார். அவரது தந்தை கூலித் தொழிலாளி.

இணைய வகுப்பு தொடங்கிய போது தொலைக்காட்சியும் இல்லாமல், செல்பேசியும் இல்லாததால் வகுப்பை பார்க்க முடியாமல் போய்விட்டது. அதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்.

மகளை காணவில்லை என்ற அவரது தந்தை தேடிய போது வீட்டுக்கு அருகே அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், எங்கள் வீட்டில்  டிவி இருக்கிறது.

ஆனால்  பழுதடைந்துள்ளது. அதனை ரிப்பேர் செய்து தருமாறு எனது மகள் என்னிடம் கூறினார். ஆனால் பழுது நீக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எதற்காக உயிரை விட்டாள் என்று தெரியவில்லை.என்னிடம் சொல்லியிருந்தால், நண்பர் வீட்டிற்கு நான் அழைத்து சென்றிருப்பேன். அங்கிருந்து  அவரால்  பாடம் கற்றிருக்க முடியும் என்று தெரிவித்தார்.

9ம் வகுப்பு மாணவியின் உயிரிழப்பு கேரளாவில்  அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார்.