பிரதமர் மோடியை காண முடியாத ஆத்திரத்தில் பேருந்துக்கு தீ வைத்த பெண்
பிரதமர் மோடியை காணமுடியாத ஆத்திரத்தில் பெண் ஒருவர் அரசுப் பேருந்துக்கு தீ வைத்தது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேருந்துக்கு தீ வைத்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 68-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு வந்தார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தப் பிறகு பல உதவிகளை வழங்கினார். வாரணாசியில் வந்த பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
வாரணாசிக்கு வந்த மோடியைக் காண்பதற்காக ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அதில் ஒரு பெண், பிரதமர் மோடியைக் காண முடியாத விரக்தியில் இருந்து வந்துள்ளார். அப்போது, பேருந்து நிலையத்தில் லக்னோவுக்கு புறப்படுவதற்காக பேருந்து ஒன்று தயாரக இருந்தது. ஆனால், திடீரென யாரும் எதிர்பாராத வகையில், அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த பெட்ரோலை திடீரென அரசு பேருந்து மீது தீ வைத்துவிட்டு தப்பினார்.
பேருந்து தீப்பிடித்து எரிவதைப் பார்த்து அலறியடித்து பயணிகள் சிதறி ஓடினார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீ அணைத்தனர். இதையடுத்து, பேருந்துக்கு தீ வைத்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ரகுவன்ஸி என்ற பெண் பேருந்துக்கு தீ வைத்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தீ வைத்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வாரணாசி மாவட்ட எஸ்.பி.தினேஷ் குமார் சிங் கூறுகையில், “ உத்தரப்பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து வந்த ரகுவன்ஸி உண்ணாவிரதம் இருந்து வந்தார். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திக் கடந்த மாதம் 29-ம் தேதி போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியைச் சந்தித்து தனது கோரிக்கையை தெரிவிக்க முயன்ற ரகுவன்சியால் பிரதமரைச் சந்திக்க இயலவில்லை. இதனால், ஆத்தமிரமைடந்து வாரணாயில் உள்ள கண்டோன்மென்ட் பஸ்நிலையத்தில் நின்றிருந்த பேருந்துக்கு தீ வைத்துள்ளார். இவர் மீது பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது “ எனத் தெரிவித்தார்.