ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமாவா? : புதுத் தகவல்

--

டில்லி
த்திய அரசுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமையை தொடர்ந்து உர்ஜித் படேல் தனது ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. மத்திய அரசு தன்னிச்சையான அமைப்பான ரிசர்வ் வங்கியை தனது கட்டுக்குள் கொண்டு வர முயலுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன.

தனது விருப்பப்படி நடக்கவே மோடி குஜராத்தை சேர்ந்த உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு சிபாரிசு செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் உரிஜித் படேல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை காக்க மத்திய அரசின் பல முடிவுகளுக்கு செவி சாய்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதன் விளைவாகவே ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் விரல் ஆசார்யா ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்னும் பொருள் பட பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் செய்தி ஊடகம் ஒன்று உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்தது.

ஆனால் அதை உர்ஜித் படேல் மறுத்தார். அதே நேரத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொருளாதார பிரிவு தலைவர் அஸ்வினி மகாஜன் மத்திய அரசின் விருப்பப்படி நடக்க விருப்பம் இல்லை எனில் ரிசர்வ் வங்கி ஆளுனர் பதவி விலகலாம் என கூறினார்.

இந்நிலையில் அரசுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் விடுத்துள்ள எச்சரிக்கையாலும் உர்ஜித் படேல் மேலும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதை ஒட்டி அவர் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ரிசர்வ் வங்கி நிர்வாகம் எதுவும் கூற மறுத்துள்ளது.