தாங்கிக்கொள்ள முடியாத இழப்பு – ஐஏஎஸ் அகாடமி சங்கர் மறைவு: நடிகர் சூரி வருத்தம்

சென்னை:

ஏஎஸ் அகாடமி சங்கர் மறைவு தனக்கு தாங்கிக்கொள்ள முடியாத இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக காமெடி நடிகர் சூரி வருத்தம் தெரிவித்துஉள்ளார்.

சென்னை அண்ணாநகரில் இயங்கி வந்த சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர், குடும்ப பிரச்சினை காரணமாக  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரிடம் படித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உயர்துறைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோர் சங்கரின் மறைவு குறித்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், தமிழக திரையுலக காமெடி நடிகரான சூரி, சங்கரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறி உள்ளார்.   பத்து வருஷமா சங்கரைத் தெரியும். இன்று காலை இயக்குநர் சற்குணம் தன்னிடம் சங்கர் இறந்துவிட்ட தகவலைச் சொன்னார்.

இதை நம்ப முடியவில்லை. அதிர்ச்சியாகிட்டேன்.  இது உண்மையா உண்மையா என்று கேட்டுக்கொண்டேன். உடனே கிளம்பிட்டேன். ஆனா அவரை இந்தக் கோலத்துல பாக்க மனசு இடம் கொடுக்கலை என்றார்.

சங்கர்  ரொம்ப தைரியமானவர்,  உறுதியானவர். தெளிவானவர். எனக்குக் கூட ரெண்டு மாசத்துக்கு முன்னாடி. வெளியே சொல்லவே முடியாதபடி பிரச்சினை. அப்போது நண்பர் சங்கர்தான் எனக்கு தைரியம் கொடுத்தார்… உறுதியா இருங்க….  என்னவா இருந்தாலும் எங்கிட்ட ஷேர் பண்ணிக்கங்க ன்னு சொல்லி அட்வைஸ் பண்ணினார்.  ஆனா சங்கர் இப்படியொரு முடிவை எடுப்பார்னு நான் நினைக்கவே இல்ல.

எத்தனையோ பேருக்கு அறிவையும் ஆற்றலையும் கொடுத்தவர் சங்கர். இன்னிக்கி அவரால, எத்தனையோ பேர் பெரியபெரிய பொறுப்புல இருக்கறாங்க. அப்பேர்ப்பட்ட சங்கர், இப்படியொரு தற்கொலை முடிவை எடுத்திருக்கவே கூடாது. என்னால தாங்கிக்கவே முடியல. ஜீரணிக்கவே முடியல… தாங்கிக்கொள்ள முடியாத இழப்பு.

இவ்வாறு நடிகர் சூரி வருத்தத்துடன் கூறினார்.