புதுடெல்லி:

வங்கியில் டெபாஸிட் செய்யப்பட்டு உரிமை கோராத தொகை ரூ. 14,578 – ஆக உயர்ந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.


மக்களவையில் எழுத்துப்பூர்வமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில்,கடந்த 2017-ம் ஆண்டு உரிமை கோராத டெபாஸிட் தொகை ரூ.11,494 கோடியாக உயர்ந்தது.

2018&ம் ஆண்டு உரிமை கோரப்படாத தொகை ரூ.14,578 ஆக உயர்ந்தது. இது 26.8% அதிகமாகும்.
ஸ்டேட் பாங்க் இந்தியாவில் மட்டும் உரிமை கோரப்படாத டெபாஸிட் தொகை 2018-ம் ஆண்டில் மட்டும் ரூ. 2,156.33 கோடி உள்ளது.

காப்பீட்டு நிறுவனங்களைப் பொருத்தவரை,2018-ம் ஆண்டு செப்டம்பரில் ரூ.16,887.66 கோடி அளவுக்கு இழப்பீடு கோரவில்லை. இறந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.998.62 கோடி வழங்கப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத டெபாஸிட் தொகையைப் பொருத்தவரை, 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டு கணக்குகளை இயக்காமல் இருந்தால், அந்த தொகை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ள பணம் செலுத்துவோர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு வட்டியுடன் அனுப்பப்படும்.

இங்கு அனுப்பப்பட்ட பணத்தை வாடிக்கையாளர்கள் கோரினால், அவர்களுக்கு வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். இந்த வட்டி விகிதம் ஆரம்பத்தில் ஆண்டுக்கு 4 சதவீதமாகவும், அதன்பின்னர் ஆண்டுக்கு 3.5 சதவீதமாகவும் வட்டி நிர்ணயிக்கப்படும். இது 2018-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி முதல் கணக்கிடப்படும்.

காப்பீட்டு நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இழப்பீடு உரிமை கோரப்படாவிட்டால், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1-ம் தேதிக்குள் மூத்த குடி மக்கள் நல நிதிக்கு மாற்றப்படும்.

கடந்த ஆண்டை விட வங்கி மோசடி பாதி அளவுக்கு குறைந்துள்ளது. சட்ட நடவடிக்கைகள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2.06,586 நிலுவை தொகையை பொதுத் துறை வங்கிகள் வசூலித்துள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில் 11,816 ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை கொள்ளையடித்த சம்பவங்கள் நடந்துள்ளன. இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.