கேரளாவில் போலீஸ் சட்டம் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு: நிறுத்தி வைத்தார் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொண்டுவரப்பட்ட போலீஸ் சட்டம் திருத்தம் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் மகளிர், குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது. அதன்படி இந்த சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், சட்ட திருத்தம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந் நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக,  போலீஸ் சட்டத்தில் சேர்க்கப்பட்ட புதிய பிரிவை அமல்படுத்த வேண்டாம் என்று கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திருத்தச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது: திருத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஜனநாயகத்தை ஆதரிப்பவர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகையால் திருத்தப்பட்ட சட்டத்தை அமல்படுத்த மாநில அரசு விரும்பவில்லை. சட்டசபையில் விரிவான விவாதத்துக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.