குரேஸ், காஷ்மீர்

காஷ்மீர் ஆற்றில் அடித்து வரப்பட்ட பாகிஸ்தான் சிறுவனின் உடலை இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அளித்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள மினிமார்க் என்னும் சிற்றூரில் 7 வயது சிறுவனான ஆபித் ஷேக் பெற்றோருடன் வசித்து வந்தான்.    அவன் தவறுதலாக எல்லையில் ஓடும் கிஷான்  கங்கா ஆற்றில் விழுந்து மூழ்கி உயிரிழந்தான்.   இதை அறியாமல் அவனை காணவில்லை என கடந்த  திங்கள் முதல் அவன் பெற்றோர் தேடி வந்துள்ளனர்

இது குறித்து சிறுவனின் தந்தை சமூக வலை தளங்களில் சிறுவனை கண்டுபிடித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  ஆற்றில் விழுந்து இறந்த சிறுவனின் உடல் இந்திய எல்லைக்குள் அடித்து வரப்பட்டுள்ளது.  குரேஸ் பகுதியில் சிறுவனின் உடலை இந்திய ராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர்.    அந்த உடலை கடந்த செவ்வாய் அன்று கண்டெடுத்த ராணுவத்தினர் அது ஆபித் உடல் என முடிவு செய்தனர்.

இவ்வாறு கிடைக்கப்பெறும் உடல்கள் எல்லையில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து விசாரணைக்கு பிறகு ஒப்படைக்கப்படுவது வழக்கமாகும்.   ஆனால் இந்திய ராணுவத்தினர் பல முறை முயன்றும் அவர்களால் அதிகாரிகளை கண்டு பேச முடியவில்லை.     அதே நேரத்தில் ஆபித்தின் தந்தை விவரம் அறிந்து மகனின் உடலை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதையொட்டி விதிமுறைகளை மீறி குரேஸ் நகர் அருகில் இருந்த எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் இந்திய ராணுவம் சிறுவனின் உடலை ஒப்படைத்துள்ளது.    இது விதிமுறைகளுக்கு மீறல் என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் இந்த உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.