நலிந்த கலைஞர்கள் உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தப்படும்! கலைமாமணி விருது வழங்கிய முதல்வர் அறிவிப்பு

சென்னை:

மிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் கலைஞர்களுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று மாலை வழங்கப்பட்டது. கடநத 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளுக்கும் சேர்த்து நேற்று விருதுகள் வழங்கப்பட்டது.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,  நலிந்த கலைஞர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும்  உதவித்தொகை ரூ.2 ஆயிரம் இனிமேல் ரூ.3 ஆயிரமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

தமிழ்நாடு இயல், இசை, நாடகம், கலைத் துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததால் பல ஆண்டு காலமாக கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படும் என்றும், விருதுக்கும் தேர்வான கலைஞர்கள் பட்டியலும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். தலைமைச்செயலாளர் க.சண்முகம் வரவேற்றுப்பேசினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்-செயலாளர் வீ.தங்கபாலு அறிக்கை வாசித்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ப.தனபால் பெற்றுக்கொண்டார்.

விழாவில், கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது, தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ், காசோலை, பொற்கிழி, கேடயம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு முதல்வர் எடப்பாடி மேடையை விட்டு கீழே இறங்கி அவர்களின் இருப்பிடம் சென்று விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,  பொதுமக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார்கள் . அந்த வகையில், தற்போது கலைத்துறையில் சிறந்த விளங்கும் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 72 வகையிலான கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதுபோல கலைஞர் பெருமக்கள் வைத்துள்ள சில  கோரிக்கைகளை ஏற்று  அறிவிப்புகளை வெளியிடுவதாக கூறிய முதல்வர், இனிமேல், கலைமாமணி விருது 3 பவுனுக்கு பதிலாக இனி 5 பவுன், அதாவது 40 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கங்களாக வழங்கப்படும்.

அத்துடன் இனிமேல் ஆண்டுதோறும் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி வழங்கப்படும். இவையும் தலா 5 பவுன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும்.

நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் நடிகர்கள் பாண்டியராஜன், சரவணன், ஸ்ரீகாந்த், சசிகுமார், கார்த்தி, விஜய் ஆண்டனி, பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி, பாண்டு, சிங்கமுத்து, இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் வைஜெயந்தி மாலா, நளினி, குட்டி பத்மினி, காஞ்சனா, கானா பாலா, கானா உலகநாதன், பரவை முனியம்மா, பாடகர் வேல்முருகன் உள்பட  பலர் விருதை பெற்றனர்.

நடிகை பிரியாமணிக்கான விருதை அவருடைய தாயாரும், நடிகர் பிரபுதேவா விருதை அவருடைய தந்தையும் பெற்றுக்கொண்டனர். திருநங்கை சுதாவும் கலைமாமணி விருது பெற்றார்.

நடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை.

விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் தேவா ஆகியோர் ‘கலைமாமணி’ விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்கள். ‘

நிறைவாக கலை பண்பாட்டுத்துறை கமிஷனர் (பொறுப்பு) க.பணீந்திர ரெட்டி நன்றி கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CM edappadi Palanisamy, Kalaimamani Award, Kalaimamani Award function, Kalaivanar Arnagam, Karthi, underprivileged artists, Yuvan Shankar Raja
-=-