Random image

வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை! சந்திரபாபு நாயுடு அசத்தல்

அமராவதி:

ந்திராவில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு  மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்தார். இந்த புதிய திட்டம் வரும் அக்டோபர் 2ந்தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

யுவ நெஸ்டம் திட்டம் (‘Yuva Nestam Scheme’) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, படித்து விட்டு  வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பயன்பெறும் வகையிலும்,  திறன் அபிவிருத்தி மற்றும் சுய தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு,  நாட்டில் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். பலர் படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திர மாநில அரசு 10 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் கிட்டத்தட்ட 260 பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளான சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் இருந்து பயிற்சி பெற்றவர்களும் நியமிக்கப்பட்டு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய இளைஞர்கள்  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திறன்களை மேம்படுத்துவதன் மூலம் தொடர்ந்து புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அவர்களின் அணுகுமுறையை நேர்மறையாக இருக்க வேண்டும் என்றும்  மாநில அரசானது உங்களை தொழிலதிபர்களாகவும்,  ஏற்றுமதியாளர்களாகவும் ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின்  பொருளாதாரம் மேம்படும்.

இளைஞர்களின் திறன் மேம்படும் வகையில் ஆந்திர அரசு ஞான பேரி, யுவ நெஸ்டம் திட்டம் போன்ற திட்டங் களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

இதுகுறித்து பேசிய ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ், இத்திட்டத்திற்காக ஆந்திர அரசு 1200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக  கூறினார்.