சென்னை:

மிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும், வேலையில்லா திண்டாட் டத்தை போக்க முடியாத அதிமுக அரசு எப்போது ஆட்சியில் இருந்து அகற்றப்படுகிறதோ, அன்றைக்குத் தான் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணத்தை தொடங்க முடியும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 2011 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அதிமுக அமர்ந்தது. கடந்த 2015 இல் ரூபாய் 100 கோடி செலவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அன்றைய முதல்வர் ஜெயலலிதா நடத்தினார். அந்த மாநாட்டில் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, தமிழகத்தில் வரலாறு காணாத தொழில் வளர்ச்சி ஏற்பட்டு, வேலை வாய்ப்பு பெருகும் என்று உறுதி கூறப்பட்டது.

அதேபோல, 2019 ஜனவரி 25 இல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதன்மூலம் 7 லட்சத்து 66 ஆயிரத்து 49 பேர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

2015 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூபாய் 10 ஆயிரத்து 950 கோடி முதலீட்டில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த ஜூன் 18, 2019 நிலவரப்படி ரூபாய் 5 ஆயிரத்து 455 கோடி முதலீட்டில் 71,169 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி 50 சதவீத இலக்கு தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கடந்த 2015, 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்தபடி முதலீடுகள் வந்ததா ? தொழில் தொடங்கப்பட்டதா ? வேலை வாய்ப்பு பெருகியதா ? இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கத்தை தர வேண்டும்.

ஆனால் நடைமுறையில் அறிவிக்கப்பட்ட முதலீட்டில் 50 சதவீதம் கூட செய்யப்படவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது. இதன்மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் தமிழக அரசு முழு தோல்வியடைந்திருக்கிறது.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியிருக்கிறது என்கிற உண்மையை அ.தி.மு.க.வினரால் மறைக்க முடியாது.

சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 9351 குரூப் – 4 பணியாளர்களுக்காக 20 லட்சம் மனுக்கள் குவிந்திருக்கிறது. ஒரு வேலைக்கு 213 மனுக்கள் வந்திருக்கின்றன. தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணிக்காக 4600 மனுக்கள் வந்துள்ளன. இதில் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பல தகுதிமிக்க இளைஞர்கள் விண்ணப்பித்து உள்ளனர். தங்களது தகுதிக்கு குறைவான பணியாக இருந்தாலும் ஊதியக்குழு பரிந்துரையின்படி உறுதியான சம்பளம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் இதை விரும்புவதாக கூறுகிறார்கள்.

இத்தகைய அவலநிலையில் உள்ள தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்றுச் சொல்வதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழகத்தில் நகரங்களில் 58.80 சதவீதமும், கிராமப்புறங்களில் 41.19 சதவீதமும் வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. படித்த தகுதிமிக்க பட்டதாரி இளைஞர் கள் தனியார் உணவகங்களில் இருந்து உணவுகளை டெலிவரி செய்கிற பணியை செய்து வருகிற அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் ஒருநாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் கடுமையாக உழைத்து ரூபாய் 200 முதல் 400 சம்பாதிக்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

மத்திய அரசு அமைப்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் தற்போது நிலவும் வேலை வாய்ப்பின்மை பற்றி புதிதாக கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

2017-18 ஆம் ஆண்டில் நடத்தப்பட்;ட கணக்கெடுப்பின்படி தேசிய அளவிலும், மாநில அளவிலும் கடுமையான வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப் பின்படி வேலை வாய்ப்பின்மை 2.2 சதவீதமாக இருந்தது. அது தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இத்தகைய சூழலின் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லாத காரணத்தால் வேலை யின்மை அதிகரித்து வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து எல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சரிகட்டுவதில் தான் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெரும்பாலான நேரம் செலவழிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கிற வரை முதலீடு வருவதற்கோ, தொழில் தொடங்கு வதற்கோ, வேலை வாய்ப்பு பெருகுவதற்கோ எந்த வாய்ப்பும் ஏற்படப் போவதில்லை. ஊழல் நிறைந்த தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க முடியாத அ.தி.மு.க. அரசு எப்போது ஆட்சியில் இருந்து அகற்றப்படு கிறதோ, அன்றைக்குத் தான் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணத்தை தொடங்க முடியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.