புதுடெல்லி:

பாஜக அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததாக, மத்திய அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.


கடந்த 2016-17 ம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து, அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
இவ்வளவுதான் பணம் எடுக்க முடியும் என வங்கிகள் கட்டுப்பாடு விதித்தன. தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கு கட்டுப்பாடா என மக்கள் கொதித்து எழுந்தனர்.
பணத்தை வங்கியிலிருந்து எடுக்க நீண்ட நேரம் காந்திருந்த முதியவர்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதே காலக் கட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளிலேயே அதிக பட்சமாக வேலையில்லா திண்டாட்டமும் பெருகியதாக தொழிலாளர் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2015-16 ல் 3.7 சதவீதமாகவும், 2013-14 ல் 3.4 சதவீதமாகவும் இருந்த வேலையில்லா திண்டாட்டம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 3.9 சதவீதமாக உயர்ந்ததாக தொழிலாளர் துறை மேற்கொண்ட சர்வேயில் தெரியவந்தது.

இது தொடர்பான அறிக்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவாரிடம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அந்த அறிக்கையை மக்கள் பார்வைக்கு வைக்காமல் அமைச்சகம் நிறுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.