ங்காரெட்டி, தெலுங்கானா

சுமார் 20 லட்சம் மரங்களை நட்டு தெலுங்கானா மாநிலத்தைப் பசுமை மயமாக்கி வரும் சிக்கப்பள்ளி அனுசூயா அம்மாவுக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் நகர விரிவாக்கம் என்னும் பெயரில் பல பசுமையான மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச் சூழல்  பாழாவது அதிகரித்து வருகிறது.  இதன் விளைவாக தற்போது தட்ப வெப்ப நிலை மாறுதல் குறித்து உலக அளவில் எச்சரிக்கை அளிக்கப்படுகிறது.   இந்த சுற்றுச் சூழல் பாழாவதை எதிர்த்து உலகெங்கும்  பல போராட்டங்கள், அரசுக்கு மனு அளித்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

அதே வேளையில் இதை மாற்ற ஒவ்வொருவராலும் முடியும் என்பதை இப்போதாவது உணர வேண்டும்.  இது மிகவும் தாமதமான நடவடிக்கை என்றாலும் மேலும் நிலை சீர்கெடுவதைத் தடுக்க இது உதவும் என்பதில் ஐயமில்லை.   ஒவ்வொரு மனிதரும் இதற்கான நடவடிக்கைகளாக தங்களால் முடிந்த அளவு மரங்கள் நட்டுப் பராமரிக்க வேண்டும் என்பது தற்போதைய சூழலில் மிக முக்கியமான ஒன்றாகும்.

இதை தெலுங்கானா மாநிலத்தில்  வசிக்கும் சிக்கப்பள்ளி அனுசூயா அம்மா என்னும் 49 வயதுப் பெண்மணி அதை நடைமுறையில் செய்து வருகிறார்.   இவர் இதை ஒரு நாளில் தொடங்கவில்லை.  இவர் தனது கணவரிடம்  இருந்து பிரிந்து வாழ்கிறார்.  அதன் பிறகு இவர் உடல் உழைப்பு பணிகளை முதலில் செய்து அதன் பிறகு தக்காண முன்னேற்றக் குழு என்னும் பெண்கள் குழுவில் இணைந்தார்.

அந்தக் குழுவின் மூலம் அனுசூயா அம்மா தரிசாக உள்ள தங்கள் ஊர் நிலத்தை வனப்பகுதியாக மாற்ற முயன்றார்.  அதன் முதல் பகுதியாக மலை அடிவாரம் மற்றும் தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நடத் தொடங்கினார். அது சிறிது சிறிதாக வளர்ந்து தற்போது 12 -16 ஏக்கர் அளவுக்குப் பெரிய தோப்பாகப் பழம், மூலிகைகள் அளிக்கும் வகையில் வளர்ந்துள்ளது.   அவர் அக்கம் பக்கம் உள்ள  சிற்றூர்களில் உள்ளவர்கள் உதவியுடன் அங்கும் மரங்கள் வளர்க்கத் தொடங்கி உள்ளார்.

இதுவரை சுமார் 20 லட்சத்துக்கு மேல் மரங்களை நட்டுள்ள அனுசூயா அம்மாவைக் கவுரவிக்கும் வகையில் சென்ற மாதம் இவருக்கு விருது ஒன்றை யுனெஸ்கோ வழங்கி உள்ளது.   அனுசூயா அம்மா 40 தலித்  பெண்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களையும் தன்னைப் போல் மரம் வளர்க்கும் பணியில் ஈடுபடுத்தி தனது பணியைத் தொடர்ந்து வருகிறார்.