நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
வாயில் வடை சுடாதவனின் உ.சு.வா பட வரலாறு
மறக்க முடியாத மே 11, 1973.
ஒரு படம் 200 கோடி 400 கோடின்றாங்க. அதுல சில மாஸ் ஹீரோங்க வேற சீனுக்கு சீனுக்கு பன்ச் டயலாக் பேசறாங்க.
அந்த கால ஹீரோவுக்கு முகத்துக்கு மேக்அப் போடுவாங்க. இப்போவெல்லாம் நோ மேக்கப், முகத்தையே கிராபிக்ஸ்ல செமையா மாத்தி அறிவாளி ரசிகர்கள் காதுல பூ சுத்தல, பூமாலையே சுத்தறாங்க.
ஒரு படம் ஓடறத்துக்காக திடீர் திடீர்னு அரசியல் பேச ஆரம்பச்சிடறாங்க. ஏதாவது டயலாக்கால கவர்மெண்ட்டு பாதிச்சு ரியாக்சன் காட்டினா, உடனே கால்ல பொத்துன்னு விழுந்துடறாங்க.
ஒரு சிங்கிள் ஜெயில் ஷாப்பிங் டயலாக்க காப்பாத்தக்கூட தைரியமில்லாம படத்துல இருந்தே தூக்கிட சொல்லிட்டு துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடிப்போயிட்டாருன்னு பேசிக்கிற அளவுக்கு நிலைமை..
இதுல காமடி என்னன்னா இவங்களையெல்லாம், அரசியல், அவரைக்காய் பொறியல்னு எம்ஜிஆர்கூட கம்பேர் பண்ணி பக்கம் பக்கமா ரைட்டப் குடுக்கறதுதான்.. மீடியாவுங்களும் சேர்த்துதான்..
ஒரேயொரு படம், உலகம் சுற்றும் வாலிபன்.. அதன் ரிலீஸ் வரலாறு தெரிஞ்சா இவங்கள்லாம் இப்படி எழுதுவாங்களான்னு தெரியலை..
20 வருஷம் கட்சிக்காக உழைச்சி கட்சியால் தானும் வளர்ந்து பெரிய ஆளானவரு எம்ஜிஆர்.
எம்எல்சி, எம்எல்ஏ, கட்சி பொருளாளர்ன்னு அரசியல் வாதியாகவும் முன்னேறியவரு..
திமுக 1972- ல் வெளியேற்றியது, எம்ஜிஆர் என்ற நடிகரை அல்ல.
அதைவிட முக்கிய பலம் வாய்ந்த எம்ஜிஆர் என்ற பழுத்த அரசியல்வாதியை.. கட்சியில் மூன்றாவது இடத்தில் உள்ள பொருளாளரை.. 1957, 1962,1967 மற்றும் 1971 ஆகிய நான்கு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்து வெற்றிக்கனியை ஈட்டித் தந்த எம்ஜிஆரை
ஒரு கம்பெனியில் சாதாரண ஊழியராக சேர்ந்து பல ஆண்டுகள் பாடுபட்டு ‘ஜெனரல் மேனேஜரான ஒருத்தர், திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டு அலுவலகத்தை விட்டு நடுத்தெருவில் நின்றால் எப்படியோ, அப்படித்தான் எம்ஜிஆர் நின்றார், 1972 அக்டோபரில்.
நேற்றுவரை ஒட்டிஉறவாடிய திமுகவின் மூத்த தலைவர்களும் அவர்களின் வசம் உள்ள தமிழக அரசு நிர்வாகமும் அடியோடு, பகையாளிகளாக மாறிவிட்ட பயங்கரம்.
எம்ஜிஆர் மட்டுமல்ல யாராக இருந்தாலும் பீதி அடையாமல் இருக்க முடியாது.
திமுகவையும் ஆட்சியையும் எதிர்த்து போராடி சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அந்தக்கணத்தில் அவருக்கு இல்லை. சினிமாவும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாடு. அனுபவசாலியான அவருக்கு நன்றாகவே தெரியும்.
அதன்பின் நடந்ததை பல்வேறு நேரடி அனுபவஸ்தர்கள் சொல்லி பலமுறை கேட்டிருக்கிறோம். வியந்தும் இருக்கிறோம். அவற்றின் சாராம்சத்தை இங்கே சொல்கிறோம்
திமுகவில் இருந்து நீக்கப்படடதால் மனக்கலக்கத்தில் இருந்த எம்ஜிஆருக்கு மெல்ல மெல்ல தைரியம் கொடுத்தது, எரிமலையாக வெடித்துப்பொங்கிய அவருடைய ரசிகர்கள்தான். படிப்படியாக தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் சட்டம் ஒழுங்கே ஸ்தம்பிக்கும் நிலைமை.
தனிக்கட்சி தொடங்க எம்ஜிஆர் தயங்கிநின்றபோது ராமாவரம் தோட்டத்திற்கு அலை அலையாக படையெடுத்துச்சென்றனர் அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள்.
அவர்களுக்கு அன்பான மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்கள் ஏராளம். தனிக்கட்சி தொடங்காவிட்டால் திமுகவினர் தங்களை அந்தந்த ஊர்களில் படாதபாடு படுத்துவர்கள் என்றெல்லாம் எம்ஜிஆரிடம் சொல்லி வாய்விட்டு கதறினார்கள் ஆதரவாளர்களும் ரசிகர்களும்..
தன்னைவிட தன்னை நம்பியிருப்பவர்களை காப்பாற்றியே தீரவேண்டும் என்ற கட்டாயத்தை அப்போதுதான் உணர்ந்தார் எம்ஜிஆர். உடனே ஒருமுடிவுக்கு வந்து துணிச்சலுடன் களமிறங்கியதில் அடுத்த சில தினங்களில் உதயமானதுதான் அதிமுக.
அதன்பிறகு எம்ஜிஆரின் தைரியத்தையும் உழைப்பையும் போராட்டக்குணத்தையும் பார்த்து உலகமே வியந்தது தனிக்கதை
இங்கே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில தினங்களில் அவரின் இதயவீணை படம் ரிலீசானது. எந்த சர்ச்சையும் இல்லாமல் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என கலர்புல்லாய் பாடிக்கொண்டே, 100 நாட்களுக்குமேல் ஓடி வெற்றிகண்டது.
ஆனால் அவர் சொந்தமாக தயாரித்து இயக்கி இரட்டை வேடங்களில் நடித்த பிரமாண்டமான படைப்பான உலகம் சுற்றும் வாலியன் ஏனோ ஆட்சியாளர்கள் கண்ணில் உறுத்த ஆரம்பித்தது.. எங்கே, யார் வெறியை ஏற்றிக்கொண்டு திரியை பத்தவைத்தார்களோ தெரியவில்லை.
உசுவா படம் வெளியாவது ஆளுங்கட்சிக்கு கௌரவம் மற்றும் மானப்பிரச்சினையாகியது. அந்த படம் வெளியானால் புடவை கட்டிக்கொள்கிறேன் என பகிரங்கமாய் சூளுரைத்தார் மதுரை முத்து என்ற திமுக தலைவர். அந்த அளவுக்கு படம் கடும் எதிர்ப்பான சூழலை சந்தித்தது..
போஸ்டர்கள் அடித்து ஒட்ட முடியாத அளவுக்கு இன்னொரு கில்லாடித்தனத்தையும் ஆட்சியாளர்கள் செய்தார்கள். எம்ஜிஆர் அதற்கும் அசரவில்லை.
சிங்கப்பூரில் இருந்து ஸ்டிக்கர் விளம்பரங்களை அடித்து இறக்குமதி செய்தி ஓட்டச்செய்தார். இந்த ஐடியாவை கொடுத்து உதவியவர் வேறுயாருமல்ல அண்மையில் காலமான நகைச்சுவை நடிகர் பாண்டு. ஸ்டிக்கர் தமிழ்நாட்டில் முதன் முதலாய் சினிமா உலகம் வழியாக இப்படித்தான் புகுந்தது.
முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட, உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசுக்கு தியேட்டர்கள் கொடுக்க உரிமையாளர்கள் தமிழகத்தில் பலரும் முன்வரவில்லை.
ஆனால் எம்ஜிஆர் அத்தனை எதிர்ப்புகளையும் தன்னுடைய சொந்த முயற்சியால்தான் சமாளித்தார். தொடைநடுங்கிப்போய் ஆட்சியாளர்களிடம் சமரசம் செய்ய முயற்சி கூட எடுக்கவில்லை.
படப்பெட்டிகளை பிடுங்கிக்கொண்டு ஓட காத்திருந்தவர்களை சமாளிக்க ஒவ்வொரு தியேட்டருக்கும் ஐந்தாறு ரூட்டுகளில் உ.சு.வா ”ரீல் பெட்டிகள்” அனுப்பட்டன.. அதில் எது ஒரிஜினல் என்பதை கண்டுபிடிக்கமுடியாமல் எதிரிகள் குழம்பிப்போனது தனிக்கதை.. பலர் படப்பெட்டி என செங்கற்கள், கருங்கற்களை பெட்டிகளை கைப்பற்றி பல்பு வாங்கினார்கள்
1973 மே மாதம் 11-ந்தேதி போஸ்டர்களே ஒட்டப்படாமல் உலகம்சுற்றும் வாலிபன் ரிலீசாகி தமிழகத்தை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் அலறவைத்தது. தியேட்டர்களுக்கு என்ன சேதம் ஏற்பட்டாலும் தன் சொத்துக்களை விற்றாவது ஈடுசெய்கிறேன் என்று எம்ஜிஆர் எடுத்த அந்த வாழ்வா, சாவா முடிவுக்கு கிடைத்த பலன் அது.
படத்தின் டைட்டில் சாங்கான, ‘’நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’’ ரசிகர்களை முறுக்கேற்றியது.. பாடலில் வரும்,,,
“நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்”
யோசித்துப் பாருங்கள்.. ஒரு ஆளுங்கட்சியை எதிர்த்து திரையில் கேட்கும்போது எம்ஜிஆரின் ரசிகர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
தியேட்டர்களில் கைத்தட்டல்களும் ஆவேச குரல்களும் விசில்களும் எப்படியெல்லாம் இருந்திருக்கும்.
மூன்று வாரங்களுக்கு போஸ்டரே ஒட்டப்படாத நிலையிலும் தமிழ்நாட்டில் அதுவரை சினிமா உலகில் இருந்த வசூல் சாதனைகளை முறியடித்தது உ.சு.வா.
பல ஊர்களில் 100 நாட்களை சர்வசாதாரணமாக கடந்தது. மாநகரங்களில் வெள்ளி விழா. சென்னையில் முன்பதிவிலேயே புதிய சாதனைகளை படைத்தது.
தேவி பாரடைஸ் தியேட்டரில் தன் நண்பர்களுக்காக உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு டிக்கெட் வாங்க இயக்குனர் பி வாசு முட்டி மோதிய கதையை பலரும் கேட்டிருக்க மாட்டார்கள். இத்தனைக்கும் பி.வாசுவின் தந்தை பீதாம்பரம்தான் எம்ஜிஆருக்கு மேக்கப்மேன்.
இத்தனைக்கும் உலகம் சுற்றும் வாலிபன் எம் ஜி ஆரின் மற்ற படங்களில் இருந்ததுபோல் அரசியல் வசனங்கள் அவ்வளவாக இல்லை.
முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவே எடுக்கப்பட்ட அந்த படத்தில் தேங்காய் சீனிவாசன் மட்டும் ஓரிடத்தில், “நீங்க ஆராய்ச்சி ஆராய்ச்சி என்கிறீர்கள் அவர் யார் ஆட்சி யார் ஆட்சி என்று கேட்கிறார்” என்று வசனம் பேசுவார்.
உலகம் சுற்றும் வாலிபனுக்கு காட்டிய அந்த நிஜமான வீரம்தான் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக எம்ஜிஆர் அனல்பறக்க அரசியல் நடத்த கைகொடுத்தது.
எல்லா இடைத்தேர்தலிலும் அவர் வெற்றிவாகை சூட பாதை அமைந்து தந்தது. கிளைமாக்சாக, தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலிலும் அமர்த்தி முதலமைச்சராக்கவும் வைத்தது. அதுவும் மூன்று முறை.. முதலமைச்சராக காலமாகும் வரத்தையும் கொடுத்தது.
தியேட்டரில் விழும் கைத்தட்டலையெல்லாம் தனக்கு விழப்போகும் ஓட்டுக்கள் என நினைத்தபடி, அரசியலுக்கே வராமல் முதலமைச்சர் கனவில் மிதக்கும் கோடம்பாக்கத்து கோமாளிகளுக்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்புபோல் இன்று ஏற்பட்டால்? வேண்டாம் எதுக்கு அந்த கற்பனை?
திமுகவில் அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்டோரோடு நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் பாடுபட்டவர். அனைத்து தேர்தல்களிலும் திமுகவுக்கு ஏறுமுகம்தான். இரண்டுமுறை ஆட்சிக்கட்டிலில் அமர தனது பலத்தைக் கொடுத்தவர்.
அப்படிப்பட்ட எம்ஜிஆரையே ஒரு மொக்க பீசு என்று வெளியே துரத்தினார்கள். தூக்கி வீசப்பட்டு நிமிர்ந்து எழுந்து தனிக்கட்சி ஆரம்பித்து எதிரிகளை மூன்று முறை பந்தாடி விட்டு சாகும் வரை முதலமைச்சராக இருந்துவிட்டு தான் போனார்..
ஒரு படம் என்ற வகையில் உலகம் சுற்றும் வாலிபன் சிறப்பம்சங்களை விமர்சித்து எழுத ஒரு தனி புத்தகம் தேவைப்படும்..
இரண்டு கதாநாயகன்கள் நான்கு கதாநாயகிகள், ஒன்பது பாடல்கள்..
48 ஆண்டுகள் கழித்தும் இன்றும் எவர்கிரீன் படம்..
வந்தான்.. வென்றான்.. சென்றான்..
(முதலமைச்சர் கனவோடு மிதக்கும் நடிகர்களுக்காக அவர்களின் ரசிக குஞ்சுகளுக்காக லேசான பட்டி டிங்கரிங்குடன் மீள்)