மோடி மீதான நம்பிக்கை போய்விட்டது: மோடிக்காக பிரசாரம் செய்த மோடியின் தோற்றம் கொண்டவர் வருத்தம்

லக்னோ:

பாஜக மீது நம்பிக்கை போய் விட்டது. மோடி மீதான நம்பிக்கை  இழந்துவிட்டேன் என்று பிரதமர் மோடிக்காக பிரசாரம் செய்த  மோடியின் தோற்றம் கொண்ட  அபிநந்தன் பதாக் என்பவர் கூறி உள்ளார்.

பிரதமர் மோடியைப் போன்று தோற்றம் கொண்டவர் அபிநந்தன் பதாக். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடிக்காக வாரணாசி தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதே போல் கோரக்பூர் இடைத்தேர்தலிலும் பாஜகவிற்காக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார்.

ஆனால், தற்போது நாட்டில் நடைபெற்று வரும் வேண்டத்தகாத சம்பவங்களால் மோடி மீது நம்பிக்கை இழந்து விட்டேன் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,  பிரதமர் மோடியின் சாயலில் நான் இருப்பதற்காக மிகவும் வருந்துகிறேன் என்று கூறினார்.

கடந்த பாராளுமந்ற தேர்தலின் போது பிரதமர்  மோடி கூறியது ஒன்று. ஆனால் தற்போது செய்து வருவது வேறொன்றாக உள்ளது. பிரசாரத்தின்போது மோடி கூறியது எதையும் பாஜக அரசு செயல்படுத்த வில்லை. அவரின் செயலுக்காக மக்கள் என்னை சபிக்கின்றனர். இது எனக்கு மன வருத்ததை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்.

மேலும், அடுத்த நடைபெற உள்ள  நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன் என்றும், காங்கிரஸ் கட்சி விரும்பினார்  காங்கிரஸ் கட்சியினருக்காக வாக்கு சேகரிப்பேன் என்றும் கூறி உள்ளார்.