பாட்னா: பீகாரில் மாநிலத்தில் தொகுதி உடன்பாட்டில் தொடர் சிக்கல் நீடிப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28ம் தேதி தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக மற்றும் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

ஆனால் கூட்டணியில், நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி  இடையே தொகுதி உடன்பாட்டில் மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது. பாஸ்வான் கட்சியில் உள்ள பல தலைவர்களுக்கு, நிதிஷின் தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திக்க விருப்பமில்லை என்று தெரிகிறது.

தொகுதி உடன்பாட்டில் லோக் ஜனசக்தி கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 2015 ஆம் ஆண்டில், இக்கட்சி 42 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களை வென்றது. இது கட்சியில் உள்ள தலைவர்களை அதிருப்திக்கு ஆளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 1 முதல் மூன்று கட்டத் தேர்தல்களுக்கான முதல் கட்ட வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால், ஓரிரு நாட்களில் கட்சி ஒரு முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.