ராணுவ உடையில் மர்ம நபர்கள்…..! தீவிரவாதிகளா….? மும்பையில் பரபரப்பு!

மும்பை:

முப்பையில் ராணுவ உடையில் சிலர் கடற்படை தளம் அருகே நடமாடியதாக வந்த தகவல்களை அடுத்து முப்பை கடற்கரை பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மும்பையில் பல இடங்களில்  உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராணுவ உடையில் சுற்றி திரிந்தவர்கள் தீவிரவாதிகளா என போலீசார் தேடி வருகிறார்கள்.

மும்பையில் உரான் கடற்கரை பகுதியில் உள்ள கப்பற்படை தளம் அருகே ராணுவ உடையணிந்த 4 பேர் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. அதையொட்டி மும்பை கடற்கரை பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை இந்திய அரசு முடுக்கி விட்டுள்ள நிலையில் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

mumbai

இதுகுறித்து இந்திய கப்பற்படை தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கேப்டன் டி.கே. சர்மா கூறியதாவது:

இந்த செய்தி குறித்து மகாராஷ்டிரா போலீசாருடன் இணைந்து, கடற்கரை பகுதியில் ராணுவ உடையில் சுற்றி திரிந்தவர்களை தேடி வருகிறோம் என்றார். மேலும் மும்பை, நவி மும்பை, தானே மற்றும் ராய்கட் கடற்கரை பகுதிகளில் அதிதீவிர எச்சரிக்கையினை மேற்கு கப்பற்படை அறிவித்தது.  இந்த பணியில் போலீசார் மற்றும் கடலோர காவல் படையும் இணைந்து ஈடுபட்டுள்ளது என்றார்.

முதல்கட்ட விசாரணையில் உரான் மற்றும் கரஞ்ஜா பகுதியருகே இந்திய ராணுவ உடை போன்ற சீருடை அணிந்த சிலர் ஒரு குழுவாக சென்றுள்ளதாக பள்ளி மாணவர்கள் 4 பேர் தகவல் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து டி.ஜி.பி. அலுவலகம் உடனடியாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் எச்சரிக்கை செய்தது. ராணுவ உடையில் சுற்றியவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில், அந்த மர்ம நபர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, கடல் அருகே அமைந்துள்ள  இந்தியாவின் நுழைவாயில், ராஜ் பவன், பாம்பே ஹை (ரிக்), பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் பிற முக்கிய இடங்கள் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பதற்றம் நிறைந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடலோர பகுதி, உள்ளுர் போலீசாரின் பாதுகாப்பில் உள்ள நிலப்பகுதி,மத்திய உள்துறை அமைச்சகம் தலைமையிலான கடலோர காவல் படை ஆகிய 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய கப்பற்படையானது கடலின் உட்பகுதியிலும்  3 அடுக்கு பாதுகாப்பை  மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.