சென்னை

சிறுசேரியில் டிசிஎஸ் நிர்வாகம் சரியான மருத்துவ முதலுதவி அளிக்காததால் ஊழியர் மரணம் அடைந்ததாக தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது

சென்னை சிறுசேரி தொழில்நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரியும் மோசஸ் ரஞ்சன் ராஜ் (வயது 41) கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று தான் பணிபுரியும் இடத்தில் மயங்கி விழுந்தார்.  திடிரென வந்த வலிப்பினால் அவர் மயங்கி விழுந்ததால் உடன் இருந்த மற்ற ஊழியர்கள் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.  அவர் செட்டிநாடு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர் வழியிலேயே மாரடைப்பால்  இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

சமீபத்தில் துவங்கப் பட்டுள்ள ஐடி ஊழியர் தொழிற்சங்கம் மோசஸ் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி உள்ளது.  இந்த தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐ டி நிறுவனங்கள் எந்த ஒரு தொழிலாளர் சட்டத்தையும் மதிப்பதில்லை. நாள் முழுவதும் ஊழியர்கள் பணி புரிந்தாக வேண்டும் என நினைக்கின்றன. ஆனால் ஊழியர்களுக்கு சரியான மருத்துவ வசதிகளை அளிப்பதில்லை.  இது குறித்து தொழிலாளர் நலத்துறை ஏன் கண்டு கொள்வதில்லை?

மோசஸ்க்கு இதுவரை வலிப்பு வந்ததில்லை.  ஆனால் வந்தவுடன் அவரை ஏன் நிர்வாகம் கவனிக்கவில்லை?  லட்சக்கணக்கான ஊழியர்கள் நிர்வாகத்துக்காக தங்களின் குடும்ப நலனையும் பொருட்படுத்தாமல் இரவும் பகலும் உழைக்கும் போது அவர்கள் நலனை பாதுகாப்பது நிர்வாகத்தின் கடமை இல்லையா?  அவர்களால் வேலைப்பணு காரணமாக சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடிவதில்லை.  சரியான தூக்கமும் கிடைப்பதில்லை.  இது போல இருக்கும் போது மன உளைச்சல், மாரடைப்பு வரக் கூடும் என்பதை ஏன் நிர்வாகம் கருத்தில் கொள்ளவில்லை?

மோசஸ்க்கு வலிப்பு என அறிவிக்கப்பட்டு 15 நிமிடங்கள் கழித்து தான் ஆம்புலன்ஸ் வந்துள்ளது.  அந்த ஆம்புலன்சுக்கு அவரை எடுத்துச் செல்லவும் அதில் ஆட்கள் இல்லை.  காவலர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.  ஆம்புலன்சில் எந்த ஒரு சோதனைக் கருவியோ, முதலுதவி செய்யும் மருத்துவர்களோ இல்லை.  இது நிர்வாகத்தின் மெத்தனம் இல்லையா?

தமிழ்நாடு அரசு மோசஸ் மரணத்துக்கு காரணமான டிசிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவருக்கு அவசரகால சிகிச்சை தராமல் அவர் மரணம் அடைந்ததற்கான தண்டனையை தர வேண்டும்.  டி சி எஸ் நிர்வாகம் மோசஸ் மரணத்தால் தவிக்கும் அவர் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப நிவாரணம் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.