டெல்லி:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். முன்னதாக நேற்று  அனைத்துக்கட்சி எம்.பி.க்கள்  கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது.

2020 – 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், மரபுபடி முதல் நாளான நாளை இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து,  பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

அதைத்தொடர்ந்து பிப்ரவரி-1ந்தேதி  2020 -2021ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

முதல்  கூட்டத்தொடர்  பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறும் என்றும், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2 வது பகுதி மார்ச் 2ம் தேதி மீண்டும் தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும்  முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில், பொருளாதார தேக்க நிலையில் சிக்கியுள்ள  இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வேலையில்லா திட்டாட்டம்,  விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, தனிநபர் வருமான வரி போன்ற பல்வேறு தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

அதுபோல, கருக்கலைப்புக்கான திருத்த மசோதா உள்பட சில மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டில் மக்களிடையே ஏற்பட்டுள்ள சிஏஏ சட்டம், காஷ்மீர் விவகாரம், வேலையில்லா திண்டாட்டம், என்ஆர்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு தயாராகி வருகின்றன.

இதன் காரணமாக, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை…

இதற்கிடையில், ‘ இரு அவைகளையும் சுமூகமாக நடத்தும் வகையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்த அனைத்துக்கட்சி கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அதிமுக நாடாளுமன்றக் குழு தலைவர் நவநீத கிருஷ்ணன், திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்க அரசு தயாராக இருப்பதாகவும், அனைத்து பிரச்னைகளின் மீதும் விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேபோல் மக்களவை அனைத்துக்கட்சி கூட்டம் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்றது.

மாநிலங்களவை அனைத்துக்கட்சி கூட்டம் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் இன்று  நடைபெற உள்ளது.