பிஹெச்.டி மாணவர்களின் திருட்டு ஆய்வு கட்டுரையை கண்டுபிடிக்க புதிய சாஃப்ட்வேர்…..பிரகாஷ் ஜவடேகர்

மும்பை:

ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சாமி கும்பிட வந்தார்.

தரிசனத்திற்கு பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘பிஹெச்.டி ஆய்வு கட்டுரைகள் திருடப்படுவதை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதற்கான ‘டர்னிடின்’ என்று பிரத்யேக சாஃப்ட்வேர் பயன்படுத்தப்படும்.

ஒருவரது ஆய்வு கட்டுரை மற்றவரால் தவறாக சமர்ப்பிக்கப்படுகிறது. இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். திருட்டு ஆய்வு கட்டுரைகளை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் பட்டம் பெற முடியாது’ ’என்றார்..

மேலும் அவர் கூறுகையில்,‘‘ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தன் டிரஸ்ட் சார்பில் மருத்துவக் கல்லூரி தொடங்குவது தொடர்பான விண்ணப்பம் வரப்பெற்றவுடன் இந்திய மருத்துவ கழகம், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஆகியோரிடம் பேசி அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

அலோபதி மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாகுறையை போக்கும் வகையில் அரசு சார்பில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.