குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்து மத்தியஅரசு பின்வாங்காது! பிரதமர் மோடி
வாரணாசி:
உ.பி. மாநிலம் வாரணாசி தொகுதியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், மோடி, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், இதில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார்.
முதலாவதாக ஜங்கம்வாடி மடத்தில் வழிபாடு செய்த பிரதமர், தொடர்ந்து ஸ்ரீ ஜகத்குரு விஷ்வராதயா குருகுலத்தில் நடைபெற்று வரும் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் இளையதலைமுறையினருக்கு பலனளிக்கும் வகையில், சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளையும் விரிவுபடுத்த அரசு முயன்று வருவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து பதாவோ பகுதியில் நிறுவப்பட்டுள்ள பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன் தயாள் உபாத்யாயாவின் 63 அடி உருவச்சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அப்போது பேசியதாவது , அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அரசால் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய மோடி, அந்த அறக்கட்டளை தனக்கு அளிக்கப்பட்ட பணிகளை விரைந்து செய்து வருகிறது. மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலம் முழுவதும் ராமர் கோயில் கட்டும் பணிக்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும், மிகப்பெரிய அந்த நிலத்தில் கட்டப்படுவதால் ராமர் கோயிலின் கம்பீரமும், தெய்வீக தன்மையும் அதிகரிக்கும் என்றார்.
தொடர்ந்து பேசியவர், இந்திய நாடானது, யார் வெற்றி பெற்றனர், யார் தோல்வியடைந்தனர் என்பதை கொண்டு ஒருபோதும் வரையறுக்கப்பட்டது இல்லை என்றும், மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தாலேயே நாடு வரையறை செய்யப்பட்டது என்றும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்யும் முடிவு, குடியுரிமை திருத்த சட்ட முடிவு ஆகியவற்றை நாட்டின் நலன் கருதியே மத்திய அரசு எடுத்ததாக கூறினார்.
ஆனால், இதற்கு பல தரப்பில் இருந்து அரசு பல்வேறு நெருக்கடிககள் கொடுத்து வருவதாகவும், ஆனால், மத்தியஅரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது, அதில் இருந்து ஒருபோது மத்திய அரசு பின்வாங்காது என்றும் திட்டவட்டமாக கூறினார்.