டில்லி:

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிர்பயா நிதியில், இதுவரை 20 சதவிகிதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

தலைநகர் டில்லியில் கடந்த 2012 ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. இந்த விவகாரம் உலகம் முழுவதும் இந்தியா மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில்,  நாட்டையே அதிர்சிக்குள்ளாக்கியது.

இதனையடுத்து பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் கடந்த 2012ம் ஆண்டு  நிர்பயா நிதி என்ற பெயரில் 1000 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் (Ministry of Women and Child Development ) சார்பில் இந்த நிதி ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நிர்பயா  திட்டத்திற்காக 2015-19ம் ஆண்டிற்கு மத்திய அரசு சார்பில் ஆயிரத்து 813 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும், இதுவரையில் 854.66 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதில் பெண்கள் பாதுகாப்பு பணிகளுக்காக வெறும் 165.48 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த நிதியைக்கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க எந்த மாநிலத்திலும் நிதி செலவிடப்படவில்லை என்றும், 18 மாநிலங்களில் பேரிடர் நிவாரண நிதி பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.