‘கலைஞர் டிவி’ சேனல் ஒளிபரப்பு உரிமம் நீட்டிக்கப்படுமா? மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு

டில்லி:

மிழகத்தில் திமுகவால் தொடங்கப்பட்ட டிவி சேனலான ‘கலைஞர் டிவி’, தொடர்ந்து ஒளிபரப்பு செய்யும் வகையில், ‘செக்யூரிட்டி கிளியரன்ஸ்’ கொடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, திமுகவுக்கென கலைஞர் டிவி, கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  சுமார் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கலைஞர் டிவியின் ஒளிபரப்பு உரிமத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பது குறித்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமை;ச்சகம் கொடுத்த பரிந்துரையின் பேரில் உள்துறை அமைச்சகம்  ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவிவாலயத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த சன் டிவி, அழகிரி குறித்து தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்பட்டு, மதுரையில் மாறனின் தினகரன் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  சன் குழுமத்தை சேர்ந்த மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து சன் டிவியை அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்ட கருணாநிதி, தனது குடும்பத்தினரின் ஆலோசனையின் பேரில், தனியாக தொலைக்காட்சி தொடங்குவதாக அறிவித்தார்.  அதைத்தொடர்ந்து, பெரும் முதலீட்டைக் கொண்டு நிறுவப்பட்ட இந்த தொலைக்காட்சி, கலைஞர் பெயரில் செப்டம்பர் 2007ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான 15ம் தேதி  தொடங்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், பல முறைகேடுகள் நடைபெற்றதாகவும்,  ஸ்பெட்க்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற தற்காக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி கொடுத்த பண பரிவர்த்தனையில் அன்னிய  செலாவணி மோசடி நடைபெற்றதாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கருணாநிதியின் மகள், மனைவி  தயாளு அம்மாள் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் அந்த வழக்குகளில் இருந்து அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் கலைஞர் டிவியை மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமம் நீட்டிப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு, மத்திய அரசு கொண்டுவந்த, புதிய தேசிய பாதுகாப்பு பாலிசியின் பரிந்துரை குறித்து, கலைஞர் டிவிக்கு கிளியரன்ஸ் கொடுப்பது மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆய்வின்,நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் கலைஞர் டிவி செயல்பட்ட விதம்,   அவர்களின் நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமா போன்ற காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.