முறைகேடு வழக்கில் வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு அருண்ஜெட்லி எதிர்ப்பு

டில்லி:
ரூ.2,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக பாங்க் ஆப் மகாராஷ்டிரா சிஇஒ மற்றும் மேலாண்மை இய க்குனருமான ரவீந்திர மராத்தே, முன்னாள் சிஇஒ சுஷில் முனோத், செயல் இயக்குநர் ராஜேந்திர குப்தா, பிராந்திய மேலாளர் நித்யானந்த் தேஷ்பாண்டே, டி.எஸ்.கே. கட்டுமான நிறுவன அதிகாரிகள், ஆடிட்டர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

சிறுநீர அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருக்கும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ஒரு வீடியோ லிங்க் மூலம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில்,‘‘வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டது கூட்டாட்சி அமைப்பை மீறிய செயலாகும். கூட்டாட்சி முறை என்பது மத்திய அரசின் வரம்புக்கு உட்பட்டதாகும். சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்தல் என்பது மாநில அரசுகளின் வரம்புக்குள் வரும். மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒரு வங்கி அல்லது ஒரு நிறுவனம், அல்லது ஒரு முகமையை மாநில அரசு விசாரிப்பது என்பது புதிய நடைமுறையாக உள்ளது.

ஒரு மாநில அரசு அதிகாரியை மத்திய விசாரணை முகமைகள் விசாரிக்க வேண்டும் என்றால் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும். சிபிஐ கூட மாநில அரசின் ஒப்புதல் இன்றி ஒரு மாநில அதிகாரியை விசாரிக்க முடியாது. கூட்டாட்சி முறையை சரிசமமாக நிர்வகிக்க வேண்டும். அதனால் கூட்டாட்சிக்கு எதிரான அச்சுறுத்தல் ஒரு மாநிலத்தில் இருந்து வந்துள்ளது. இது மத்திய அரசிடம் இருந்து வரவில்லை’’ என்றார்.

இதில், எந்த ஒரு மாநில அரசின் பெயரையோ, நிறுவனத்தின் பெயரையோ அருண்ஜெட்லி குறிப்பிடாமல் பொதுவாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,‘‘யார் விசாரிக்க வேண்டும்?. எப்போது விசாரிக்க வேண்டும்?. குற்றத்தை எது நிர்ணயம் செய்கிறது? போன்றவை குறித்து முடிவு செய்ய வேண்டிய உடனடி தேவை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யக் கூடிய ஒரு நடைமுறையில் முடிவு எடுக்க தாமதம் இருக்க கூடாது. ஊழல் தடுப்பு சட்டம் மோசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டியது குறித்து அனைவரும் முடிவு செய்ய வேண்டும்.

தற்போது வெளியில் இருந்து வரும் 2 பிரச்னைகளை நாடு எதிர்கொண்டு வருகிறது. கச்சா எண்ணெய் அதிகளவில் கொள்முதல் செய்யும் இடத்தில் நாம் உள்ளோம். அதனால் நம்மிடம் உள்ளூர் கட்டுப்பாடு என்பது இதில் குறைவு தான். அடுத்து நம்மீது தொடுக்கப்பட்டுள்ள வர்த்தக போர். இது நம்மிடம் திணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சவால்களையும் நாம் சர்வதேச அளவில் தான் தீர்வு காண வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.