#MeeToo விவகாரம்: பெண் பத்திரிகையாளர் மீது அமைச்சர் அக்பர் கிரிமினல் அவதூறு வழக்கு

டில்லி:

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள மத்திய அமைச்சரும், முன்னாள் செய்திப்பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே.அக்பர், தன்மீது புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரபல பத்திரிக்கையாளராக பணியாற்றி, பின்னர்  பா.ஜனதாவில் இணைந்து  எம்.பி.யாகி, தற்போது இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர்  பொறுப்பு வகித்து வரும்  எம்.ஜே.அக்பர் மீது, அவருடன் பணியாற்றிய பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை #MeToo ஹேஸ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

பிரியா ரமணி என்ற பத்திரிகையாளர் அவர்மீது  முதலில் குற்றம் சாட்டி யிருந்தார். அதைத்தொடர்ந்து மேலும் 6 பெண்கள் அவர்மீது குற்றச்சாட்டை சுமத்தி இருந்தனர்.  இந்த நிலையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மஜ்லி டி புய் காம்ப்  மத்திய அமைச்சர்  எம்.ஜே. அக்பர் மீது பாலியல் புகார் கூறி இருந்தார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியிறுத்தி வருகிறது. மேலும், சக அமைச்சர்களான மேனகா காந்தி, அத்வாலே போன்றவர்களும் அக்பர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அக்பர் மீதா புகார் குறித்து பரிசீலித்தே முடிவெடுக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் அக்பர் ராஜினாமா செய்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின.

இந்த நிலையில், தன்மீது அவதூறு குற்றச்சாட்டு கூறியதாக பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது  கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் சார்பாக   வழக்கறிஞர் கரன்ஜவாலா, டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.