பழைய புத்தகத்தினை புரட்டிப் பார்த்திருக்கிறார்: கமல் சோனியா சந்திப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்:

ழைய புத்தகத்தினை புரட்டிப் பார்த்திருக்கிறார் கமல் என்று, ராகுல் மற்றும் சோனியாகாந்தி உடனான நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து உள்ளார்.

கமலின்  மக்கள் நீதி மய்யம் கட்சி  அங்கீகாரம் பெறுவது குறித்து தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று நேற்று டில்லி சென்ற கமல், அங்கு தேர்தல் அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அதையடுத்து, நேற்று மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை 11 மணி அளவில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும்,  மூத்த நிர்வாகியுமான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கமல் ராகுல், சோனியா சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த பொன்னானர்,  பழைய புத்தகத்தினை கமல் புரட்டிப் பார்த்திருக்கிறார் என்று கூறினார். அதுவாவது பயனுள்ள புத்தகமா என்று பார்த்தால் இத்துப் போன புத்தகம். கருத்தில்லாத புத்தகம். பயன் இல்லை என்று மக்களால் ஒதுக்கப்பட்ட புத்தகம். அதனைப் போய் புரட்டிப் பார்த்திருக்கிறார். இதனால் அந்த புத்தகத் திற்கும் பயன் இல்லை. திரும்ப திரும்ப புரட்டிக் கொண்டிருப்பவருக்கும் பயன் இல்லை என்று கூறினார்.

சோனியா காந்தியை  மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்  பழைய புத்தகம் என்று கூறியிருப்பது தமிழக காங்கிரசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.