டெல்லி: நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன், சிறு, குறு நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதில் கொரோநோன் தடுப்பு நடவடிக்கை மற்றும்  விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந் நிலையில் ரூ.50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும், சிறு தொழில்களுக்கான சலுகை வழங்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள்,  பிரகாஷ் ஜவடேகர், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரகாஷ் ஜவ்டேகர் கூறியதாவது: சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிட உதவும். நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்படும். விவசாயிகளுக்கு 50 முதல் 83 சதவீதம் வரை குவிண்டாலுக்கு கூடுதலாக விலை கிடைக்கும்.

3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.  மக்காச்சோளம், துவரம் பருப்பு, பாசிப் பயிறு உள்ளிட்ட பயிர்களுக்கான  குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்.

குறு நிறுவனங்களின் நிதி வரையறை ரூ.25 லட்சத்தில் இருந்து 1 கோடியாக அதிகரிக்கப்படும். 2 லட்சம் சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் தரப்படும். குறு நிறுவனங்களின் நிதி வரையறை 25 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தப்படுகிறது.

ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்வோருக்கு பயனளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவியில் 7% வரை வட்டி தள்ளுபடி செய்யப்படும். கடனுதவி அளிப்பதன் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவார்கள் என்று கூறினர்.